>>>24 ஆயிரம் பேருக்கு வேலை தேர்வாணய தலைவர் தகவல்

"இந்தாண்டு இறுதிக்குள், 24 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்,'' என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் கூறினார்.சென்னை பல்கலைக்கழக, மேலாண்மை கல்வி துறை சார்பில், "மனித வள மேலாண்மை தற்போதைய முன்னேற்றம்' குறித்த கருத்தரங்கம், மயிலாப்பூரில் உள்ள சவேரா ஓட்டலில் நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் நட்ராஜ் பேசியதாவது:

மனித வளத்தை மேம்படுத்தும் வகையில், நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆனால், நிறுவனங்களில் உள்ள மனித வள மேம்பாட்டு அலுவலர்கள், ஊழியர்களின் குறைகளை மட்டும் கூறுபவர்களாக உள்ளனர். புதிதாக சிந்திப்பவர்களாகவும், வேலை பார்ப்பவர்களோடு சேர்ந்து, குழுவாகவும் செயல்படுவதில்லை. அனைத்து துறைகளில் இருக்கும் மனித வள அதிகாரிகள் மிக திறமையுடன் செயல்படுவர்களாக இருக்கும் பட்சத்தில், வேலை பார்ப்பவர்களும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படுவர்.

செப்டம்பர், 30ம் தேதி நடைபெற்ற வி.ஏ.ஓ., தேர்வு முடிவுகள், இம்மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும். குரூப்-2 தேர்வு வினாத்தாள் வெளியானதால், நவ., 4ல் மறுதேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள், வரும்       டிச., 15க்குள் வெளியிடப்படும்.

அரசு பணியாளர் தேர்வாணைய வரலாற்றில் முதன் முறையாக, ஓராண்டுக்குள், 24,400 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். குரூப்-1 காலி பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களை, அரசு துறைகளிடம் கேட்டுள்ளோம். அவர்கள் தரும் பட்சத்தில், காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு, நட்ராஜ் பேசினார்.நிகழ்ச்சியில், உயர் கல்வி துறை செயலர் ஸ்ரீதர், சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கோடீஸ்வர பிரசாத், பேராசிரியர்கள், மாணவர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.