>>>வட்டியுடன் மின்கட்டணம்: 300 அரசு பள்ளிகள் அதிர்ச்சி

மதுரை மாவட்டத்தில் மின் கட்டணம் செலுத்தாத, 300 அரசு பள்ளிகளுக்கு, வட்டியுடன் மீண்டும் கட்டண ரசீது அனுப்பி, மின்வாரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு அதிக தொகையை செலுத்த முடியாது என்பதால், வட்டியை ரத்து செய்ய வேண்டுமென சம்பந்தப்பட்ட பள்ளிகள் தரப்பில் மின்வாரியத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மேலமடை உட்பட, 300 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், 2009 ம் ஆண்டு முதல், மின் கட்டணம் செலுத்தவில்லை. ஜனவரியில் பள்ளிகளின் மின் இணைப்பை வாரியம் துண்டித்தது. மின்சாரம் இன்றி மின்விசிறி, விளக்குகள் செயல்படாததுடன், "கணினி வழி கற்றல்" திட்டமும் முடங்கியது. பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் இப்பிரச்னை தெரிவிக்கப்பட்டது. பள்ளிகள் செலுத்த வேண்டிய கட்டண விவரங்கள், மின்வாரியம் மூலம் பெற்று அனுப்பப்பட்டன. இதற்குரிய நிதியை ஒதுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். இதனிடையே நிலுவை கட்டணத்தை வட்டியுடன், செலுத்த மீண்டும், ரசீது அனுப்பி உள்ளது மின்வாரியம். தலைமையாசிரியர்கள் கூறுகையில், "மின்வாரியம் அனுப்பியுள்ள புதிய ரசீது குறித்து மேலிடத்தில் அனுமதி பெற, மேலும் தாமதம் ஏற்படும். எனவே, வட்டியை ரத்து செய்ய வேண்டும்" என்றனர்.