>>>தனியார் பள்ளிகள் புதிதாக துவங்க டிச., 31 வரை விண்ணப்பிக்கலாம்

"புதிய தனியார் பள்ளிகள் துவங்க, டிச., 31 வரை விண்ணப்பிக்கலாம்' என, மெட்ரிக் கல்வி இயக்குனரகம் தெரிவித்தது. தற்போது, மாநிலம் முழுவதும், 4,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 25 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அரசுப் பள்ளிகள் அதிகம் துவங்கப்பட்டாலும், தனியார் பள்ளிகளின் வளர்ச்சி வேகம் குறையவில்லை. ஆண்டுதோறும், 50 முதல், 70 புதிய பள்ளிகள் துவங்கப்படுகின்றன. இந்நிலையில், வரும் கல்வியாண்டில் (2013-14), புதிய பள்ளிகளை துவக்க விரும்புவோர், டிச., 31க்குள், விண்ணப்பிக்க வேண்டும் என, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. பள்ளி அமைவிடம், முகவரி உள்ளிட்ட முழுமையான ஆவணங்கள் அடங்கிய இரு கோப்புகளை தயார் செய்து, மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர், ஆவணங்களை ஆய்வு செய்து, அதன்பின், இயக்குனரகத்திற்கு பரிந்துரைப்பார். இயக்குனரகம், ஆவணங்களை ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்கும். வரும் கல்வியாண்டில், 50 புதிய பள்ளிகள் துவங்க, விண்ணப்பங்கள் வரலாம் என, எதிர்பார்ப்பதாக, இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்தன.