உடற்பயிற்சி, ஓவிய ஆசிரியர் பணி நியமனத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான, 3
சதவீத இடஒதுக்கீடு, பின்பற்றப்படாததால், ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்தி
வைக்க வேண்டும் என, மாற்றுத்திறனாளி நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்
மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகம்
முழுவதிலும், பல்வேறு பள்ளிகளில் காலியாக உள்ள, உடற்பயிற்சி மற்றும் ஓவிய
ஆசிரியர் பணியிடங்களுக்கு, 1,400 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், முன்னுரிமை விதிகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலின் படி,
ஒரு மாற்றுத்திறனாளிக்கு கூட முன்னுரிமை வழங்கவில்லை என்பது தெளிவாகிறது.
எனவே, இப்பணிகளுக்கு ஏற்ற மாற்றுத் திறனாளிகள் யாரும் வேலை வாய்ப்பு
அலுவலகங்களில் பதிந்திருக்கவில்லை என்றால், அத்தகவல் வெளிப்படையாக
தெரிவிக்கப்பட வேண்டும் . அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளுக்கு, சட்டப்படி, 3 சதவீத ஒதுக்கீடு
அளித்த பின், பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். அது வரையில், ஆசிரியர்
பணி நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.