அரசு பள்ளிகளில் பணியாற்றும், 600க்கும் மேற்பட்ட, பகுதி நேர கடைநிலை
ஊழியர்களை, பணி வரன்முறை செய்ய, அரசாணை பிறப்பித்ததைத் தொடர்ந்து, பள்ளி
கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிரான, கோர்ட் அவமதிப்பு வழக்கை, சென்னை
ஐகோர்ட் முடித்துக் கொண்டது. தமிழகத்தில், பல மாவட்டங்களில்
உள்ள, அரசு பள்ளிகளில், பகுதி நேர, தினக்கூலி ஊழியர்கள், பலர்
பணியாற்றுகின்றனர். தங்களை பணிவரன்முறை செய்யக் கோரி, 600க்கும்
மேற்பட்டோர், ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீது,
2010ம் ஆண்டு, டிசம்பரில், ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. ஊழியர்களின் மனுக்களை பரிசீலித்து, உத்தரவுகளை பிறப்பிக்குமாறு, பள்ளி
கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டது. உத்தரவு அமல்படுத்தவில்லை எனக் கூறி,
பள்ளி கல்வித் துறைச் செயலர், பள்ளி கல்வி இயக்குனர், மாவட்ட கல்வி
அதிகாரிகளுக்கு எதிராக, கோர்ட் அவமதிப்பு வழக்கு, தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை, நீதிபதி ஜோதிமணி (தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்)
விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு: ஐகோர்ட் உத்தரவுப்படி, பணி
வரன்முறை செய்து, கடந்த அக்., 3 ல் தேதி, பள்ளி கல்வித் துறை, உத்தரவு
பிறப்பித்துள்ளது. பணப் பலன்கள் வழங்கப்படும் என, அரசு உத்தரவிலும்,
கூடுதல் அரசு பிளீடரின் வாதத்திலும், தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு
செய்கிறேன். கோர்ட் உத்தரவை அமல்படுத்தும் விதமாக, அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன்,
கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, எடுத்த நடவடிக்கைகளை, இந்த கோர்ட்
பாராட்டுகிறது. இவ்வாறு, நீதிபதி ஜோதிமணி உத்தரவிட்டுள்ளார்.