திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை முருகன் கோவிலில்,
ஆண்டவர் உத்தரவு படி, தற்போது பள்ளி பாட புத்தகம் வைத்து, பூஜை நடக்கிறது.
இதனால், நாட்டில் பள்ளிகல்வி சிறப்பாக இருக்கும் என, பக்தர்கள் கருத்து
தெரிவிக்கின்றனர். நாட்டில் எந்த முருகன் கோவிலிலும் இல்லாத சிறப்பு,
சிவன்மலை முருகன் கோவிலில் உண்டு. இங்கு மூலவராக வீற்றிருக்கும்
சுப்பிரமணியர், பக்தர்களின் கனவில் வந்து சொல்லும் பொருளை வைத்து, அதற்கு
சிறப்பு பூஜை நடத்துவது, நடந்து வருகின்றன. இதில், தற்போது கோவை மாவட்டம்,
கருமத்தம்பட்டியை சேர்ந்த பழனிசாமி என்பவரது கனவில் வந்த, முருகப்பெருமான்,
பள்ளி பாடபுத்தகம் வைத்து பூஜிக்க சொல்லியுள்ளார். அவர் கோவில்
நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்து, முறைப்படி பூஜை உத்திரவு கேட்டு, கடந்த,
5ம் தேதி முதல், ஐந்தாம் வகுப்பு, ஆங்கிலபுத்தகம் மற்றும் + 1வகுப்பு தமிழ்
உரை புத்தகம் வைத்து, பூஜை நடக்கிறது. பள்ளி பாடபுத்தகம் வைத்து பூஜை
நடப்பதால், நாட்டில் பள்ளி கல்வி சிறப்பாக இருக்கும், மாணவர்களிடம்
தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்று, பக்தர்கள் கூறுகின்றனர். இதற்கு
முன், விபூதி வைத்து பூஜை நடந்தது. அப்போது நாட்டில் அதிகபடியான
கோவில்களில், குடமுழுக்கு நடந்தது. மேலும், மக்களிடம் ஆன்மீகம் ஈடுபாடு
அதிகரித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஆற்று நீர் வைத்துப் பூஜை
செய்யப்பட்டது, காவிரி பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை தலைதூக்கியது.
துப்பாக்கி வைத்து பூஜை செய்தபோது, கார்கில் போர் நடந்தது. அதற்கு முன், மண்
வைத்து பூஜை நடந்தது. அப்போது, "ரியல் எஸ்டேட்' தொழில் செழித்து, பூமி
விலை பலமடங்கு அதிகரித்தது. ஒரு படி அரிசியும், 100 ரூபாய் பணம் வைத்து
பூஜை நடந்தது. அதனால், அரிசி விலை பல மடங்கு உயர்ந்தது, தற்போது உயர்ந்தும்
வருகிறது. அடுத்து, 500 ரூபாய் பணம் வைத்து பூஜை நடந்ததால், நாட்டில் பண
புழக்கம் அதிகரித்தது. மஞ்சள் பொடி வைத்து பூஜை நடந்த போது, நல்ல விலைக்கு
மஞ்சள் விற்பனை ஆனது. தங்கம் வைத்து பூஜை நடந்த போது, தங்கம் விலை பல
மடங்கு உயர்ந்தது. தற்போது பள்ளி பாட புத்தகம் வைத்து பூஜை நடப்பதால்,
பள்ளிகல்வி சிறப்பாக இருக்கும் அல்லது சிக்கலை சந்திக்கும் என, சிவன் மலை
முருக பக்தர்கள் பெரிதும் நம்புகின்றனர்.