>>>ஓய்வூதிய திட்ட நிதியில் முறைகேடு: ஆசிரியர்கள் புகார் : தணிக்கையும் இல்லை; கணக்கும் இல்லை

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பிடிக்கப்படும் நிதியில், முறைகேடுகள் நடப்பதாகவும், கணக்கு விவரங்களை, ஆசிரியர்களுக்கு தருவது இல்லை எனவும், ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளி கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பங்களிப்பு, ஓய்வூதிய நிதி குறித்த கணக்குகள், சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, பொது கணக்கு தணிக்கை அலுவலகத்தில் பராமரிக்கப்படுகிறது. தொடக்க கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர், ஊழியர்களின் கணக்கு விவரங்கள், சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள, "டேட்டா சென்டர்' மையத்தில் பராமரிக்கப்படுகிறது.
2003ல் அமல்படுத்தப்பட்ட திட்டம் : கடந்த, 2003, ஏப்ரல் 1ம் தேதி, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. இதற்குப் பின், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், கல்வித்துறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், தொடக்க கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்களின் சம்பளம் மற்றும் டி.ஏ.,வில், 10 சதவீதத்தை, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பிடித்து, கருவூலத்தில் செலுத்துகின்றனர். இந்தப் பணியை, 413 உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் செய்கின்றன. இது தொடர்பான கணக்கு விவரங்களை, உள்ளூர் தணிக்கை அலுவலர்கள், தணிக்கை செய்வர். பின், அது தொடர்பான விவரங்களை, டேட்டா சென்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விவரங்கள் தரப்படுவதில்லை : ஆனால், பெரும்பாலான, ஏ.இ.இ.ஓ., அலுவலகங்களில், அந்த தணிக்கை நடைபெறவில்லை. இதனால், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட கணக்கு விவரங்கள், டேட்டா சென்டர் மையத்திற்கும் வர வில்லை. இதனால், ஆசிரியர் களுக்கும், எந்த விவரங்களும் தரப்படுவது இல்லை.
புதிதாக பணியில் சேரும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, ஓய்வூதிய திட்டத்திற்கான, எண்கள் மட்டும் பதிவு செய்து வழங்கப்படுகிறது எனவும், அதன்பின், ஆண்டுதோறும், ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ள தொகை குறித்த விவரங்களை தருவது இல்லை எனவும், ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர், பேட்ரிக் ரெய்மண்ட் கூறியதாவது:
ஏ.இ.இ.ஓ., அலுவலகங்களில், எல்.எப்.ஏ., - லோக்கல் பண்டு ஆடிட் நடக்கவில்லை. ஆசிரியர்களின் ஓய்வூதிய நிதியை, பல, ஏ.இ.இ.ஓ., அலுலகங்களில், முறைகேடு செய்கின்றனர். கடந்த காலங்களில், இது போன்ற முறைகேடுகளின் அடிப்படையில், பல ஊழியர்கள் மீது, நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

கணக்கில் வரவும் இல்லை : பல ஆசிரியர்கள் இறந்து விடுகின்றனர். அவர்களின் நிதியை, சம்பந்தபட்ட குடும்பத்தினருக்கு வழங்குவதும் கிடையாது. ஆசிரியர்களின் நிதியில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க, மாநிலம் முழுவதும் உள்ள ஏ.இ.இ.ஓ., அலுவலகங்களில், குறிப்பிட்ட தேதிக்குள், உள்ளூர் தணிக்கை நடத்தி முடிக் கவும், அதன்பின் அது குறித்த விவரங்களை, டேட்டா சென்டருக்கு அனுப்பவும், தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு பேட்ரிக் கூறினார்.

வழிமுறைகள் என்ன? : துறை அதிகாரிகள் கூறுகை யில், ""தணிக்கை செய்வதற்கு, நிதித்துறை தான் உத்தரவிட வேண்டும். இத்திட்டத்தில், தெளிவான விதிமுறைகளே கிடையாது. இந்த பிரச்னை, பள்ளி கல்வித்துறையிலும் இருக்கிறது,'' என்றனர்.

முதல்வரின் வாக்குறுதி : கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளில், சென்னையில் பேசியபோது, "பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்' என, ஜெயலலிதா அறிவித்தார். மேலும், சம்பள முரண்பாட்டை களைய நடவடிக்கை, மகப்பேறு விடுமுறை, மூன்று மாதத்தில் இருந்து, ஆறு மாதங்களாக நீட்டிப்பு செய்யப்படும் என, அவர் வாக்குறுதி அளித்தார். இதில், மகப்பேறு விடுமுறை நீட்டிப்பு அமலுக்கு வந்துள்ளது. சம்பள முரண்பாட்டை களையவும், முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்ட வாக்குறுதி மட்டும், அப்படியே இருப்பதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதிலும், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.