>>>அனுமதி பெறாத பாடப்பிரிவால் மாணவர்களுக்கு சிக்கல்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அனுமதி வாங்காமல், ஜவகர் கல்லூரியில் துவங்கப்பட்ட புதிய பாடப்பிரிவால், மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நெய்வேலி ஜவகர் கல்வி கழகத்தின் கீழ், ஜவகர் அறிவியல் கல்லூரி கடந்த, 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு இளநிலை, முதுகலையில், தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், வேதியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
நுழைவுத் தேர்வு: கல்லூரியில், இந்தாண்டு புதிதாக கணித துறையில், எம்.பில்., பாடப்பிரிவு துவங்க முடிவெடுக்கப்பட்டது; மாணவர்கள் சேர்க்கையும் நடந்தது. 25க்கும் மேற்பட்ட மாணவர்கள், எம்.பில்., பாடப்பிரிவில் நுழைவுதேர்வு எழுதினர். இதில், 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; கல்வி கட்டண தொகையையும் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில், வகுப்புகள் துவங்கப்படவில்லை. மாணவர்கள் கல்வி கட்டண தொகையும் திரும்பி தரப்படவில்லை. மற்ற கல்லூரிகளில், செப்டம்பர் மாதத்தில் வகுப்புகள் துவங்கப்பட்ட நிலையில், ஜவகர் கல்லூரியில், எம்.பில்., வகுப்புகள் துவங்கப்படவில்லை. கல்வி கட்டணம் செலுத்தியும், வகுப்பு ஆரம்பிக்கப்படாததால், எதிர்காலம் பாழாகும் என, மாணவர்களும், பெற்றோரும் அச்சப்பட்டனர். கல்வி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
அனுமதி அவசியம்: இந்நிலையில், மாணவர்கள் சேர்க்கை விவரங்களை ஜவகர் கல்லூரி, திருவள்ளுவர் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பியுள்ளது. "புதிய வகுப்புகள் துவங்க வேண்டும் என்றால், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அனுமதி வாங்க வேண்டும். வகுப்பு துவங்குவதற்கு, விண்ணப்பிக்காத நிலையில், எப்படி மாணவர்கள் சேர்க்கை நடத்தினீர்கள் என, விளக்கம் அளிக்க வேண்டும்" என, திருவள்ளுவர் பல்கலைக்கழகம், கல்லூரி நிர்வாகத்திற்கு கேட்டுள்ளது.
இதுகுறித்து, கல்லூரி வட்டாரங்கள் கூறியதாவது: கல்லூரி முதல்வர், உரிய காலத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பம் செய்யாததாலும், கல்லூரி பேராசிரியர்கள், எம்.பில்., நெறியாளர்களுக்கான தகுதி, பல்கலைக் கழகத்திலிருந்து, முன்கூட்டியே பெறாததாலும், எம்.பில்., வகுப்பு துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், மாணவர்களின் ஓராண்டு கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி கட்டணம் செலுத்திய மாணவர்களை, மற்ற கல்லூரியில் சேர்க்க கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வலியுறுத்தல்: கல்லூரி முதல்வர் சந்திரசேகரனிடம் கேட்டபோது, "இது குறித்து நான் எந்த விளக்கமும் அளிக்க முடியாது; கல்லூரி நிர்வாகம் மட்டுமே பதிலளிக்க முடியும்,&'&' என்றார். அனுமதி பெறாமல் பாடப்பிரிவை துவங்கிய கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் காக்க, உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.