>>>பிரமோஸ் ஏவுகணை திட்டவிஞ்ஞானியாக மாணவி தேர்வு

 
நெய்வேலி அடுத்த சேப்ளாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி, பிரமோஸ் ஏவுகணை திட்ட விஞ்ஞானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த சேப்ளாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ், ராஜேஸ்வரி தம்பதியின் மகள் தேன்மொழி, 21; இவர், தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மின்னியல் துறையில் இறுதியாண்டு படித்து வருகிறார்.
இந்த பல்கலைக் கழகத்தில் கடந்த வாரம் கடல்வழி மற்றும் வான்வழித் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் பிரமோஸ் ஏவுகணை திட்ட விஞ்ஞானிகளை தேர்வு செய்வதற்கான கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது.இதில் மாணவி தேன்மொழியை, பிரமோஸ் ஏவுகணை திட்ட விஞ்ஞானியாக, திட்ட அதிகாரி அனில்மிஸ்ரா தலைமையிலான குழுவினர் தேர்வு செய்தனர்.இதையடுத்து, பிரமோஸ் ஏவுகணை திட்ட விஞ்ஞானி தேன்மொழிக்கு, முதல் ஆறு மாதங்களுக்கு செயல்முறை பயிற்சியும், அதனைத் தொடர்ந்து விஞ்ஞானி பணியும் வழங்கப்படும்.இந்தியா, ரஷ்யா மின்னணு தொலைத் தொடர்புத் துறை இணைந்து இந்த பிரமோஸ் ஏவுகணை திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். சாதனை மாணவி தேன்மொழியை வடக்குத்து ஊராட்சி தலைவர் ஜெகன் மற்றும் அப்பகுதி மக்கள் வாழ்த்தினர்.