அங்கன்வாடிகளில், எரிவாயு சிலிண்டர் பயன்படுத்த நிதி கிடைக்காததால்,
சத்துணவு சமைக்கும் பணிக்கு விறகுகளை பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி
திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும், 49,499 அங்கன்வாடி மையங்கள், 4940
குறு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, புகையில்லா சமையலறை
உருவாக்கப்பட்டு, சமையல் எரிவாயு இணைப்பு, அடுப்பு, குக்கர் வழங்கப்பட்டது. இதற்குரிய சிலிண்டரை அங்கன்வாடி பணியாளர்களே ரூ1400க்கு வாங்குகின்றனர்.
இதற்கான பணம், கடந்த ஓராண்டாக வழங்காமல், இழுத்தடிப்பதால், மீண்டும்
விறகுக்கு மாறி வருகின்றனர்.
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் வாசுகி
கூறியதாவது: சமையல் எரிவாயு சிலிண்டர் 1400 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது.
வீடுகளுக்கு வாங்கப்படும் அளவு தான் உள்ளது. ஒரு சிலிண்டர் 2 மாதத்துக்கு
வரும். விறகுக்கு ஒரு குழந்தைக்கு 19 பைசா ஒதுக்குகின்றனர். அதிகபட்சம் 20
குழந்தைகள் இருந்தால், மாதத்துக்கு 114 ரூபாய். இரண்டு மாதத்துக்கு 228
ரூபாய். அந்த தொகையை கணக்கிட்டு தான் சிலிண்டருக்கு பணம் வழங்கப்படும், என
கூறுகின்றனர். இதன்படி பார்த்தால், ஒரு சிலிண்டரை ஓராண்டுக்கு பயன்படுத்த
சொல்கின்றனர். அந்த செலவு தொகையையும், ஓராண்டாக வழங்காமல் இழுத்தடிப்பதால்,
மீண்டும் விறகுக்கு மாறும் நிலை உள்ளது, என்றார்.