புதுமையை படைக்கும் திறன் கொண்ட இந்திய மாணவர்களுக்கு, அடுத்த கட்ட
படிப்புகளுக்கு கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என ஜெர்மனி அரசு உத்தரவு
பிறப்பித்துள்ளது. இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் கூறியதாவது:
ஜெர்மனியில் படிக்க இந்திய மாணவர் களுக்கு ஆர்வம் உண்டாக்கும் பொருட்டே,
கல்வி கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. உணவு மற்றும் தங்கும் இடத்துக்கு
கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது, ஜெர்மனியில் 6,000 இந்திய மாணவர்கள் பயில்கின்றனர். சென்ற
கல்வியாண்டில் இதற்கான முயற்சியில் சிக்கல் இருந்தது. வரும் கல்வியாண்டில்
இச்சிக்கல் சரி செய்யப்பட்டது. மாணவர்கள், ஜெர்மனியில் வேலை செய்து பணம்
ஈட்டவும் வழி செய்யப்பட்டுள்ளது. டில்லியில், ஜெர்மனி அரசால் நடத்தப்படும்
இந்திய ஜெர்மன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகமும் இதற்கு ஒத்துழைப்பு
கொடுத்துள்ளது. கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படுவதால், இருநாட்டு
உறவுகளும் மேம்படுவதோடு, அறிவியலில் புதுமைகளை படைக்க முடியும். டில்லியில்
உள்ள ஜெர்மன் துõதரகம் அருகே அமைக்கப்படும் "ஜெர்மன் ஹவுஸ்" இந்திய
மாணவர்கள், ஜெர்மனியில் பயில்வதற்கான வசதிகளை செய்யும். ஜெர்மன் பல்கலையில், இந்திய மாணவர்கள் ஆங்கிலத்தில் பயிலவும், வழி
செய்யப்பட்டுள்ளது. இந்திய மாணவர்கள், ஜெர்மன் மொழியையும் கற்க முடியும்.
இளம் அறிவியல் படைப்பாளிகளை உருவாக்குதே ஜெர்மனியின் நோக்கம். "ஜெர்மன்
ஹவுஸ்" உடன் இணைந்துள்ள 14 பல்கலைகள் மூலம், இந்திய மாணவர்கள் கட்டணம்
இன்றி பயில முடியும். இதனால் ஜெர்மனியில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம்
அதிகரிக்கும். இந்தியாவைப் போலவே பிரேசில், ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான்
போன்ற இடங்களிலும் ஜெர்மன் ஹவுஸ் அமைக்கப்படுகிறது என்றார்.