அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணத்தை, 2,000
ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தி, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சட்டசபையில், விதி, 110ன் கீழ், அவர் வெளியிட்ட
அறிக்கை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன்களை காக்கும் வகையில், வீடு
கட்டும் முன்பணம், 15 லட்சம் ரூபாயில் இருந்து, 25 லட்சம் ரூபாயாக
உயர்த்தப்பட்டு உள்ளது. பெண் ஊழியர்களுக்கான, மகப்பேறு விடுப்பு,
மூன்றிலிருந்து, ஆறு மாதமாகவும், அரசு ஊழியர்களுக்கான, புதிய மருத்துவக்
காப்பிட்டு திட்டம் உள்ளிட்ட, பல சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. கடந்த,
1996ல், முதல்வராக இருந்த போது, 25 ஆண்டுகள், அப்பழுக்கற்ற பணியை முடித்த,
அரசு ஊழியர்களுக்கு, 500 ரூபாய் மதிப்புள்ள, இந்திரா விகாஸ் பத்திரத்தை
வழங்க உத்தரவிட்டு, வழங்கப்பட்டு வந்தது. பின், இந்திரா விகாஸ்
பத்திரத்திற்கு பதில், கிசான் விகாஸ் பத்திரம் வழங்கப்பட்டு வந்த நிலையில்,
கடந்தாண்டு டிச., முதல், கிசான் விகாஸ் பத்திரத்தை, மத்திய அரசு
நிறுத்திவிட்டது. இதை கருத்தில் கொண்டு, 15 ஆண்டுகளுக்கு முன்
நிர்ணயிக்கப்பட்ட, 500 ரூபாயை, 2,000 ரூபாயாக உயர்த்தியும், அதை ரொக்கமாக
வழங்குவதோடு, பணியை பாராட்டி, அரசு சார்பில் சான்றிதழ் வழங்கவும்
உத்தரவிடப்பட்டு உள்ளது. இது மட்டுமின்றி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்
நிர்ணயிக்கப்பட்ட, 2,000 ரூபாய் பண்டிகை முன்பணத்தை, 5,000 ரூபாயாக
உயர்த்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.