>>>தேர்வுத்துறை பணியாளர்களுக்கும் ஆசிரியர் பணி வழங்க கோரிக்கை

கல்வித்துறையில், ஆசிரியர் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்குவது போல், தேர்வுத்துறை ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என, ஆசிரியர் தகுதி வாய்ந்த பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில், ஆசிரியர் அல்லாத பணிகளில் வேலை பார்க்கும் ஊழியர்களில், பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் தகுதி உடையவர்களுக்கு, 2 சதவீதம் அளவில், ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது. இவ்வாறாக, பல ஊழியர்கள், ஆசிரியராக பணி மாறுதல் பெறுகின்றனர். இந்த வாய்ப்பு, தேர்வுத்துறை ஊழியர்களுக்கு மட்டும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் தகுதியுடன் பலர், தேர்வுத் துறையில், சாதாரண நிலையில் பணிபுரிந்து வருகின்றனர்.
தேர்வுத்துறை ஊழியர்கள் சிலர் கூறியதாவது: பள்ளிக் கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் தான், தேர்வுத்துறையும் வருகிறது; இதர கல்வித் துறைகளும் வருகின்றன. அப்படியிருக்கும் போது, கல்வித்துறை ஊழியர்களுக்கு மட்டும், ஆசிரியர் பணி வாய்ப்பு வழங்கி, எங்களுக்கு மறுப்பது, எந்த வகையில் நியாயம் என, தெரியவில்லை. தகுதி வாய்ந்த தேர்வுத்துறை ஊழியர்களுக்கும், ஆசிரியர் பணி வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தேர்வுத்துறை ஊழியர்களின் கோரிக்கை குறித்து, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் கூறுகையில், "இந்த விவகாரத்தில், தமிழக அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்" என, தெரிவித்தன.