>>>ஐஐடி கவுன்சிலிங்கில் ஆன்லைன் முறை ரத்து

மாணவர் சேர்க்கை செயல்பாட்டில், ஒரு புதிய விதியாக, ஆன்லைன் கவுன்சிலிங் முறை ரத்துசெய்யப்பட்டு, மாணவர்கள் நேரடியாக கலந்துகொள்ளும் முறை, அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கடந்த பல்லாண்டு காலமாக, ஆன்லைன் கவுன்சிலிங் முறை நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால், வரும் 2013ம் ஆண்டு முதல், இந்த நடைமுறை ரத்துசெய்யப்பட்டு, மாணவர்கள் நேரடியாக, சம்பந்தப்பட்ட ஐஐடி -களுக்கு செல்ல வேண்டிய புதிய விதிமுறை புகுத்தப்படவுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டில், புபனேஷ்வர் - ஐஐடி மற்றும் ஐஎஸ்எம் - தன்பாத், ஆகியவற்றில் சேர்க்கைப் பெறுவதற்காக, 2 பேர் ஆள்மாறாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, வருங்காலத்திலும், அதுபோன்ற மோசடி நடவடிக்கைகளைத் தவிர்க்கவே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவை மேலும் கூறுவதாவது: நாட்டின் 15 ஐஐடி -கள், பனாரஸ் இந்து பல்கலை மற்றும் தன்பாத்திலுள்ள ஐஎஸ்எம் ஆகியவற்றிலுள்ள மொத்தம் 10,000 இடங்களுக்கு, ஆண்டுதோறும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியிடுகின்றனர். இத்தகைய பெரிய நடைமுறை செயல்பாட்டில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினர், முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.
எனவேதான், இந்த புதிய விதி புகுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரில் வரும்போது, ஆள் மாறாட்டம் சாத்தியமற்றுப் போகிறது என்கின்றன சம்பந்தப்பட்ட வட்டாரங்கள்.