>>>மாணவர் திறமைக்கு சவால்

அடுத்த ஆண்டு ஏப்ரலில், புரோபிசியன்சி டெஸ்ட் நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. பொதுவாக, பொதுத் தேர்வுகள் நடைபெறுவதற்கு முன் நடத்தப்படும் இத்தேர்வு, பத்தாம் வகுப்பு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மாற்றி நடத்தப்படுகிறது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுகள் மார்ச் மாதத்தில் நடைபெறுகிறது. அப்போது இத்தேர்வை நடத்தினால், மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தம் ஏற்படும் என்பதால், இத்தேர்வு ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது, என சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு, மேலும் ஊக்கம் அளித்து, சிறந்த இலக்குகளை அடையைச் செய்தல்; இலக்கை அடைய எந்த பாடத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்; எந்த வகையான கல்வி பயின்றால் எதிர்காலம் சிறப்படையும் என்பதை மாணவர்கள் அறிவதற்காகவே இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில், மாணவரது கற்றல், தனிப்பட்ட திறமைகள் போன்றவை சோதிக்கப்படுகிறது. மொழிப் பாடங்களில் எழுதுதல், வாசித்தல், பேசுதல், கவனம் போன்றவற்றை சோதித்தல், அறிவியல் பாடங்களில் கொடுக்கப்பட்ட, சிக்கல் நிறைந்த கருத்தை விளக்குவது, கொள்கைகளை பயன்படுத்துவது, குறிப்பிட்ட சூழ்நிலையில் ஆராய்ந்து முடிவு தருவது போன்றவற்றை சோதிக்கும் வகையிலும், கணிதப் பாடத்தில், சிக்கல் நிறைந்த கணக்குகளை தீர்ப்பது, கணித சிந்தனை, பகுத்தறிதல், நடைமுறை திறன் போன்றவற்றை சோதிக்கும் வகையிலும் வினாக்கள் இடம்பெறும்.