உலக கடல்சார் பல்கலைக்கழகத்தின் கிளையை, இந்தியாவில் துவக்குவதற்கான
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய கடல்சார் பல்கலைக்
கழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை மத்திய அமைச்சகம் மேற்கொள்ளும்
என்று மத்திய அமைச்சர் வாசன் தெரிவித்தார். இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்
சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில், 2008ம் ஆண்டு நவம்பர், 14ம் தேதி
பாராளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது. நான்காவது பல்கலைக்கழக நாள்
கொண்டாட்டம் நேற்று நடந்தது. பல்கலைக்கழக முதல் துணைவேந்தரான விஜயன்
வரவேற்று பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி குறித்து பேசினார். மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், சிறப்பு விருந்தினராக கலந்துக்
கொண்டு பல்கலைக் கழகத்திற்கான புதிய "லோகோ"வை அறிமுகப்படுத்தி, விழா
மலரை வெளியிட்டு பேசியதாவது: கடந்த, 1949ம் ஆண்டு இந்திய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடிக்கல்
நாட்டப்பட்டது. அதன் பிறகு, இந்திய கடல்சார் கல்வியுடன் இணைக்கப்பட்டது.
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு, கடல்சார் வாணிபம் என்பது மிக முக்கியமானது.
கடல் வர்த்தகத்தை பொறுத்தவரை வரும், 2015ம் ஆண்டு உலக சந்தையில்
இந்தியாவின் பங்கு, 9 சதவீதம் அதிகரிக்கும். தற்போது, கடல்சார் பொறியாளர்கள் தட்டுப்பாடு, அதிகளவில் உள்ளது. நாம்
ஒவ்வொரு ஆண்டும், மூவாயிரத்திற்கும் அதிகமான பொறியாளர்களை உருவாக்கி
வருகிறோம். தனியார் கல்வி நிறுவனங்களும் சிறந்த கடல்சார் பொறியாளர்களை
உருவாக்கி வருகிறது. தற்போதுள்ள தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியை போல கடல்சார் துறையும்
மிகப்பெரிய வளர்ச்சியடையும். வரும், 2018 - 19ம் ஆண்டு, அனைத்து
மாணவர்களும் கடல்சார் சம்பந்தப்பட்ட, படிப்புகளை தேடி வருவார்கள்.
இத்துறைக்காக, 285 கோடி ரூபாயினை, அரசு ஒதுக்கியுள்ளது. இதில்,
உள்கட்டமைப்பிற்காக, 272 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. மற்றவைகளுக்காக,
6.92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், உலகத் தரமான கடல்சார் கல்வியை நம் மாணவர்களுக்கு தரும்
முயற்சியாக, உலக கடல்சார் பல்கலைக் கழகத்தின் கிளையை, இந்தியா அமைப்பதற்கான
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்கு
தேவையான உதவிகளை அமைச்சகம் மேற்கொள்ளும். இவ்வாறு, மத்திய அமைச்சர் வாசன்
பேசினார்.