>>>டி.இ.டி மறுதேர்வு முடிவை அறிய முடியாமல் ஏமாற்றம்

டி.இ.டி., மறுதேர்வு முடிவை, இணையதளத்தில் அறிய முடியாமல், தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான, டி.இ.டி., தேர்வு, ஜூலையில் நடந்தது. அத்தேர்வில் பங்கேற்ற, 6.67 லட்சம் பேரில், வெறும், 0.33 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால், அக்டோபர், 14ம் தேதி, டி.இ.டி., மறுதேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் இரவு, டி.ஆர்.பி., இணையதளத்தில் (://trb.tn.nic.in/TET2012/02112012/status.asp) வெளியிடப்பட்டதாக, அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று, இத்தேர்வு முடிவை அறிய முடியாமல், லட்சக்கணக்கான தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து, புதுச்சேரியைச் சேர்ந்த தேர்வர் ஒருவர் கூறுகையில், "தேர்வு முடிவு வெளியிடப்பட்ட தகவலை, நேற்று காலை, நாளிதழ் மூலம் அறிந்தேன். உடனே, என் தேர்வு முடிவை அறிய, டி.ஆர்.பி., இணையதளத்தை தொடர்பு கொண்டேன். பலமுறை முயன்றும், தேர்வு முடிவை அறிய முடியாததால், ஏமாற்றம் அடைந்தேன்" என்றார். டி.ஆர்.பி., நிர்வாகிகள் கூறுகையில், "நேற்று, ஒரே நேரத்தில், லட்சக்கணக்கானோர், வாரியத்தின் இணையதளத்தை தொடர்பு கொண்டதால், இந்த சிக்கல் ஏற்பட்டது. இந்த தொழில்நுட்ப சிக்கலை சரிசெய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இன்று, தேர்வர்கள், தங்கள் தேர்வு முடிவை, இணையதளத்தில் காணலாம். இவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி, வரும், 6ம் தேதி துவங்கும்" என்றனர்.