>>>சர்க்கரை நோய் வந்தாலே, அது "முதல் மாரடைப்பு'

"சர்க்கரை நோய் வந்துவிட்டாலே, "முதல் மாரடைப்பு' வந்துவிட்டதாக பொருள்,' என, கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கருத்தரங்கு நடந்தது. இதில் டாக்டர் மகேஷ்பாபு பேசியதாவது: இந்தியாவில் 6 கோடி பேர், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதைவிட அதிகமானோர், தங்களுக்கு நோய் உள்ளது என்பதை கண்டறியாமல் உள்ளனர். எனவே 30 வயதை கடந்த அனைவரும் தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவசர வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் சர்க்கரை நோயை உருவாக்கியுள்ளன. துவக்கத்தில் இந்நோயை கவனிக்காமல் விட்டுவிட்டால், நோய் முற்றி கண்கள், சிறுநீரகம், நரம்பு, இருதயம், மூளையை பாதித்துவிடும்.சர்க்கரை நோய் வந்துவிட்டாலே, "முதல் மாரடைப்பு' வந்துவிட்டதாக பொருள். எனவே இந்நோய் கண்டறியப்பட்டது முதல், உணவுக் கட்டுப்பாடு, நடைப்பயிற்சி, அதிக காய்கறிகளை உண்பது, மருந்து மாத்திரைகளை உரிய நேரத்தில் எடுத்துக் கொள்வது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.தற்போது 20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கூட இந்நோய் வருகிறது. உடற்பயிற்சி, மாலை நேரங்களில் விளையாடாமை இதற்கு காரணம். மாணவர்கள் அதிகமாக விளையாட வேண்டும். நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். தமிழக அரசு மருத்துவ மனைகளில், சர்க்கரை நோய் மாத்திரைகள், இன்சுலின் போன்றவை இலவசமாக கிடைக்கிறது. மது அருந்துவோருக்கு கணையம் பாதிப்பதால், சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. இவ்வாறு அவர் பேசினார்.