>>>உபரியாகக் காட்டப்பட்ட இடங்களில் புதிய நியமனம்...!

நியமன விதிகளுக்கு முரணாகவும், ஏற்கெனவே பணியாற்றி வந்த ஆசிரியர்களின் நலனுக்கு எதிராகவும் உபரியெனக் காட்டப்பட்டு, பணி நிரவல் செய்யப்பட்ட இடங்களில் புதிதாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் நாமக்கல் மாவட்டத் தலைவர் ம.பொ.ஜெயச்சந்திரன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய மனு:

"உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2012, ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் பணியிட கணக்கெடுப்புப்படி உபரியென கணக்கிடப்பட்ட ஆசிரியர்கள் பணி நிரவல் அடிப்படையில் மாவட்டத்துக்குள்ளும், மாவட்டத்துக்கு வெளியேயும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனால், கர்ப்பிணிகள், ஓய்வுபெறும் தருவாயில் இருந்தவர்கள், கடும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியர்களும்கூட எந்தவித சலுகையோ, கருணையோ காட்டப்படாமல் வேறு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர். அரசு உத்தரவுக்கு கட்டுப்பட்டு அவர்களும் பணியாற்றிய பள்ளியிலிருந்து வேறு பள்ளிகளில் பணியில் சேர்ந்து கொண்டனர். இந்த நிலையில், தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பல இடங்களில் உபரியென கணக்குக் காட்டப்பட்டு ஏற்கெனவே பணியாற்றி வந்த ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்ட இடத்திலேயே அதே பாடத்துக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக,

எர்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஜூலை மாதம் உபரியென காட்டப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணி நிரவல் மூலம் வேறு பள்ளிக்கு அனுப்பப்பட்டார். டிசம்பர் மாதம் அதே பள்ளியில் தமிழாசிரியர் தேவையென காட்டப்பட்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற புதிய ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உபரியென காட்டப்பட்ட பணி நிரவல் செய்யப்பட்ட இடங்களில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பது விதிகளுக்கு முரணானது. ஏற்கெனவே பணியாற்றி வந்த ஆசிரியர்களின் நலனுக்கு எதிரானதுமாகும். இத்தகைய தவறு நிகழக் காரணமானவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், உபரியென கணக்குக் காட்டப்பட்டு தற்போது புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள பணியிடங்களில் வெளியேற்றப்பட்ட ஆசிரியர்களையே பணியமர்த்தவும் வேண்டும். மாவட்டம் முழுவதும் பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்குக் கலந்தாய்வு நடத்திய பிறகு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவும், இந்தக் குறைகளை நிவர்த்தி செய்யும் வரை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களைப் பணியில் அமர்த்துவதை தாற்காலிகமாக நிறுத்தி வைத்து புதிய பணியிட ஆணை வழங்க வேண்டும்"
என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.