>>>மருத்துவ மாணவர்கள் வருகைப்பதிவேடு : துணைவேந்தர் திட்டவட்டம்

"மருத்துவ மாணவர்களின் வருகைப்பதிவேட்டை, 75 சதவீதமாக குறைக்க, பல்கலை நிர்வாகம் மறுத்துவிட்டது' என, தமிழ்நாடு மருத்துவ மாணவர் கூட்டமைப்பு தலைவர் காமராஜ் கூறினார். மருத்துவ மாணவர்கள், நேற்று, பல்கலை துணைவேந்தர் சாந்தாராமை சந்தித்து, தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதுகுறித்து, காமராஜ் கூறியதாவது: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆண்டு தேர்வுகளின், விடைத்தாள் நகல்களை வழங்கவும், தேர்வு நேரத்தில், ஒரு பாடத்திற்கும், மற்றொரு பாடத்திற்கும் இடையே, விடுமுறை அளிக்கவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, துணைவேந்தர் தெரிவித்தார். தேர்வு விடைத்தாள்கள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு அனுமதி அளிப்பது குறித்து, பல்கலை ஆட்சிமன்ற குழுவில் முடிவு செய்யப்படும் எனக் கூறிய துணைவேந்தர், மருத்துவ மாணவர்களின் வருகைப்பதிவேட்டை, தற்போதுள்ள, 90 சதவீதத்தில் இருந்து, 75 சதவீதமாக குறைக்க மறுத்துவிட்டார். இவ்வாறு, காமராஜ் கூறினார்.