>>>சிவகங்கை, தேனி, நாமக்கல்லில் விரைவில் அரசு நர்சிங் கல்லூரி

சிவகங்கை, தேனி, நாமக்கல்லில் தலா ரூ.2.50 கோடியில் 120 மாணவிகள் பயிலும் வகையில், அரசு நர்சிங் கல்லூரியை துவக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய கிராம சுகாதார திட்டத்தின் (என்.ஆர்.எச்.எம்.,) கீழ், மத்திய அரசு, சிவகங்கை, தேனி, நாமக்கல் மாவட்டங்களில், புதிய அரசு நர்சிங் கல்லூரிகளை துவக்கவும், அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில், நர்சிங் மாணவிகளுக்கு பயிற்சி வழங்கவும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நாமக்கல், தேனி அருகே வீரபாண்டி, சிவகங்கை, அருகே பூவந்தி ஆகிய இடங்களில், மத்திய அரசு நிதி உதவியுடன், 2013ம் ஆண்டுக்குள், அரசு நர்சிங் கல்லூரி துவக்கப்பட உள்ளது. பூவந்தியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், 882 சதுர அடியில், ரூ.2.3 கோடியில் வகுப்பறை, நிர்வாக கட்டடம், மாணவிகள் தங்கும் விடுதி கட்டப்படவுள்ளது.
பொதுப்பணித்துறை பொறியாளர் (மருத்துவமனை கட்டடம்) ஒருவர் கூறுகையில், "தேசிய கிராம சுகாதார திட்டத்தில், நர்சிங் கல்லூரி கட்டுவதற்கு, திட்ட வரையரை தயாரித்து வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசுக்கு வழங்கியுள்ளோம். சென்னையில், நாளை (டிச., 26) நடக்கும் சுகாதார திட்ட இயக்குனர் கூட்டத்தில், இதற்கு அறிவிப்பு வெளியாகும். அதன்பின், 2013க்குள் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை நடைபெறும்' என்றார்.