>>>உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறதா? கண்டுபிடிக்க ஒரு சுய பரிசோதனை

வெற்றியின் ஆணிவேர் தன்னம்பிக்கை. உங்களிடம் தன்னம்பிக்கை மிகுந்திருந்தால் நீங்களும் வெற்றியாளராக வலம் வரலாம். உங்கள் தன்னம்பிக்கையை சோதிக்க ஒரு சுய பரிசோதனை இங்கே…
உங்கள் உடல்வாகு எப்படிப்பட்டது?
அ. எனது உடல் அழகான `ஸீரோ சைஸ்’ கொண்டது. அதில் எனக்கு திருப்திதான்!
ஆ. மேனியழகு பொலிவாகத்தான் இருக்கிறது. இன்னும் வசீகரிக்கும் தோற்றமுடன் எனது உடலை வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.
இ. மக்கள் நான் வசீகரிக்கும் வனப்புடன் தோன்றுவதாகக் கூறுகின்றனர். ஆனால் நான் அப்படி நினைப்பதில்லை!
நீங்கள் வெகுநாள் விரும்பிய முக்கிய மனிதரை எதிர்பாராத விதமாக சந்திக்கிறீர்கள்? அப்போது…
அ. நானே முதலில் பேச்சைத் தொடங்கி அவருக்கும், எனக்கும் இடையே பரஸ்பர கருத்தொற்றுமை இருக்கிறதா? என்பதைக் கண்டறிவேன்.
ஆ. பார்த்ததும் ஏற்கனவே அறிமுகமானவர் மாதிரி அரட்டையடிக்கத் தொடங்கிவிடுவேன்..!
இ. அவர் என்னிடம் முதலில் பேச மாட்டாரா? என்று காத்திருப்பேன்!
சொந்தபந்தங்களுடன் உறவை பேணுவதில் நீங்கள் எப்படி?
அ. எப்போதாவது கருத்துவேறுபாடு ஏற்பட்டு உறவில் விரிசல் விழுவதுபோல தோன்றினால் நான் என் நிலையை ஆய்வு செய்து தவறுகள் இருந்தால் அதற்காக மன்னிப்புக் கோரி உறவு முறையை மேம்படுத்த முயற்சிப்பேன்.
ஆ. உறவுமுறை நன்றாகவே இருக்கிறது..! ஆனாலும் சில பிரச்சினைகள் வந்து போகின்றன.
இ. உறவுகள் என்றாலே தொல்லையும் துயரமும்தான்..! அவர்கள் என்னை புரிந்து நடந்து கொள்ளவே மாட்டார்கள்!
உங்கள் முகத்தில் திடீரென்று முகப்பரு தோன்றினால் என்ன செய்வீர்கள்..?
அ. முகப்பரு மருந்து தடவுவேன். இன்றைய முகப்பரு நாளைக்கு மறைந்துவிடும் என்கிற நம்பிக்கையோடு அடுத்த வேலையில் கவனம் செலுத்துவேன்.!
ஆ. முகப்பருவைக் கண்டதும் உடனே நல்ல டாக்டரை நாடி செல்வேன். டாக்டரிடம் செல்வதை தள்ளிப்போட மாட்டேன்.
இ. எனக்கு உடம்பு சரியில்லை என்று கூறிவிட்டு, அன்றைய அலுவலை ஒத்திப்போட்டுவிட்டு கவலையில் ஆழ்ந்து விடுவேன்!
நெருங்கிய நண்பர் ஒருவர் எதிர்பாராத துன்பத்தில் மாட்டிக்கொண்டால்…?
அ. முதல்ஆளாக ஓடிப்போய் அவருக்கு உதவி செய்வேன்..!
ஆ. அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு என்ன தேவைப்படுகிறது என்பதைக் கேட்டறிந்து உதவி செய்வேன்!
இ. உதவி செய்ய எனக்குத் தெரிந்த இன்னொரு நண்பரை அனுப்பி வைப்பேன்..!
உங்களது வாழ்க்கை எப்படி செல்கிறது?
அ. எனக்கு உண்மையான நண்பர்கள் அதிகம். அதனால் வாழ்க்கை ஆனந்தமாய் கழிகிறது..!
ஆ. ஏதோ இருக்கிறேன். நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் அங்கங்கே தனித்தனியாக இருக்கிறார்கள். எனக்கு ஏற்படும் கஷ்டநஷ்டத்தை கண்டுகொள்ள ஆளில்லை.
இ. இது என்ன வாழ்க்கை. ஒரு சந்தோஷமும் இல்லை. வாழ்க்கையே வெறிச்சோடிப் போய்க் கிடக்கிறது!
ஒரு குழுவை வழிநடத்தும் தலைவராக உங்களை தேர்வு செய்தால்…?
அ. உடனடியாக ஒத்துக்கொள்வேன்!
ஆ. நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கேட்டறிவேன். அதன்பிறகு தலைமை தாங்குவது பற்றி முடிவு செய்வேன்.
இ. நான் என்ன செய்வது என்று அறியாமல் தவிப்பேன். தலைமை தாங்க யோசிப்பேன்!
உங்கள் பஸ் பயணம் திடீரென்று ரத்தாகிறது, தனியார் பஸ் நிறுவனம் அதற்கு மாற்று ஏற்பாடு செய்யவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. என்ன செய்வீர்கள்…?
அ. கம்பெனி மேலாளரை சந்தித்து, இழப்பீடு தர வற்புறுத்துவேன்.
ஆ. என் கோரிக்கையை அமைதியாகத் திரும்பத் திரும்ப எடுத்துரைப்பேன்!
இ. திரும்ப திரும்ப கேட்பதால் பயனில்லையென்று கருதி, இன்னொரு பஸ்சில் ஏறி வீட்டிற்கு போய்விடுவேன்.
உங்கள் பதில்களில் `அ’ விடைகள் அதிகமாக இருந்தால் நீங்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர்தான். எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு! எப்படிப்பட்ட சூழ்நிலையையும் உங்களுக்குச் சாதகமாக்கி நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.
அதிக கேள்விகளுக்கு விடை ஆ-வை தேர்வு செய்திருந்தால் நீங்கள் எதுவும் நல்லதாகவே நடக்கும் என்று நம்புவீர்கள். சிறிது சஞ்சலங்கள் தோன்றினாலும் சூழ்நிலையை சமாளிக்கும் வல்லமை உங்களிடம் இருக்கும்.
பதில் `இ’ உங்கள் விடைகளில் மிகுந்திருந்தால் நீங்கள் நம்பிக்கை குறைவானவர். உங்கள் வாழ்வியல் முறைகளை சீர்திருத்துவதோடு மன தைரியத்துடன் செயல்படத் தொடங்குங்கள்.