>>>சான்றிதழ் சமர்ப்பிக்க வந்த பட்டதாரிகள் விரட்டியடிப்பு

டி.இ.டி., தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பின் போது, தவிர்க்க முடியாத காரணங்களால், சில சான்றிதழ்களை சமர்ப்பிக்காத தேர்வர்கள் உட்பட, 500 பேர் நேற்று, டி.ஆர்.பி., அலுவலகத்தை, முற்றுகையிட்டனர். இவர்களின் குறைகளை கேட்க, துறை அதிகாரிகள், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், போலீசாரை குவித்து, விரட்டி அடித்தனர்.
டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்ற, 533 பேர், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரவில்லை. வராததற்கான காரணத்தை தெரிவித்து, 10ம் தேதி, டி.ஆர்.பி., அலுவலகத்தில், விண்ணப்பம் அளிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.
சான்றிதழ் சரிபார்ப்பில், வேலைவாய்ப்பு அலுவலக அட்டையை ஒப்படைக்காத, இடைநிலை ஆசிரியர்கள், 47 பேர், அந்த அட்டையை, நேரில் ஒப்படைக்கலாம் எனவும், டி.ஆர்.பி., அறிவித்திருந்தது. அதன்படி, ஆப்சென்ட் ஆன தேர்வர்கள் உட்பட, 500 பேர் நேற்று, டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு வந்தனர்.
இவர்களில், டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பின் போது, சில சான்றிதழ்களை ஒப்படைக்காதவர்கள், அதிகளவில் இருந்தனர். தகுதி இருந்தும், தேர்வு செய்யப்படவில்லையே எனக் கூறி, பலர் வருந்தினர்.
இவர்கள் அனைவரிடமும், முறையாக விண்ணப்பங்களை பெறவோ, அவர்களின் குறைகளை கேட்கவோ, டி.ஆர்.பி., எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, போலீசாரை குவித்து, கூட்டத்தைக் கலைத்தனர். இதனால், ஆவேசம் அடைந்த பட்டதாரிகள், அலுவலக வாயிலை முற்றுகையிட்டு, கோஷம் போட்டனர்.
இன்றுடன், பணி நியமன கலந்தாய்வு முடிவதால், "தேர்வு பெற்றும், வேலை கிடைக்கவில்லையே" என, பெண் பட்டதாரிகள், கண்ணீர் விட்டனர். பல பட்டதாரிகளுக்கு, பி.எட்., சான்றிதழை, தமிழக அரசு தாமதமாக வழங்கியுள்ளது. இதனால், சான்றிதழ் சரிபார்ப்பின் போது, சமர்ப்பிக்க முடியவில்லை என்றும், இதையே காரணம் காட்டி, தற்போது தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், குமுறினர்.
பட்டதாரிகள் புகார் குறித்து, டி.ஆர்.பி., தலைவர் சவுத்ரியிடம் கேட்ட போது, "தகுதியில்லாதவர்கள் எல்லாம் வந்துவிட்டனர். இவர்களின் குறைகளை கேட்டுக் கொண்டிருந்தால், நாங்கள் வேலை பார்க்க முடியாது" என்றார்.