>>>அரசு பொறியியல் கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்ப ஒப்புதல்

அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள, 151 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஒப்புதலை, தமிழக அரசு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில், 154 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதையடுத்து, தொழிற்கல்வி கமிஷனர், இப்பணியிடங்களை தேர்வு மூலம் நிரப்புமாறு, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு பரிந்துரைத்தார். இந்தாண்டு பிப்ரவரி மாதம், இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு, ஏப்ரல் மாதம், 22ம் தேதி தேர்வை நடத்தி முடித்தது. அரசு பொறியியல் கல்லூரிகளில், 14 துறைகளின் கீழ் காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வு முடிவுகள் வெளியிடும் வேளையில், வழக்கு தொடரப்பட்டதை கருத்தில் கொண்டு, தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள, 151 பேருக்கு, பணி நியமன ஆணை வழங்கும்படி தொழிற்கல்வி கமிஷனருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை, நேற்று வெளியிடப்பட்ட நிலையில், இந்த பணி நியமன ஆணையானது, சென்னை ஐகோர்ட்டின், இறுதித்தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.