>>>புதிய தலைமைச் செயலராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமனம்

கடந்தாண்டு மே, 16ம் தேதி, தலைமைச் செயலராக இருந்த மாலதியை மாற்றிவிட்டு, தேபேந்திரநாத் சாரங்கி தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார்.
ஒடிசா மாநிலம், கட்டாக் நகரைச் சேர்ந்த, தேபேந்திரநாத் சாரங்கி, 1977ல், இந்திய ஆட்சி பணியில் சேர்ந்தார். தமிழகத்தில் வருவாய், போக்குவரத்து, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் உள்ளிட்ட துறைகளில், முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
இவர், இம்மாதம், 31ம் தேதி, பணி ஓய்வு பெறும் நிலையில், இவரது பணிக் காலத்தை நீட்டிக்குமாறு, மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால், தமிழக அரசின் பரிந்துரையை, மத்திய அரசு நிராகரித்து விட்டது. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதால், அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளின் பதவி உயர்வு பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில், மாநில அரசின் பரிந்துரையை, மத்திய அரசு  தவிர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு நேற்று வெளியானது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷீலா பாலகிருஷ்ணன், இந்திய ஆட்சிப் பணியில், 1976ல் சேர்ந்தார். தமிழகத்தில் போக்குவரத்து துறை செயலர், அண்ணா மேலாண்மை கல்வி நிறுவன திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

கடந்தாண்டு, டிசம்பர், 7ம் தேதி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூடுதல் தலைமைச் செயலராக பொறுப்பேற்றார். தற்போது, தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஓய்வு பெற, இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவரது கணவர் பாலகிருஷ்ணன், தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின்,கூடுதல் தலைமைச் செயலராக உள்ளார். இவர்களுக்கு, இரு மகன்கள் உள்ளனர்.

டி.ஜி.பி., ராமானுஜத்தின் பதவிக்காலத்தை, இரண்டுஆண்டுகள் நீட்டிக்க, ஏற்கனவே தமிழக அரசு பரிந்துரை செய்தது. சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பின் அடிப்படையில், அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

ஆனால், தலைமைச் செயலர் பதவி நீட்டிப்பு விவகாரத்தில், மத்திய அரசு நிராகரித்துள்ளது.