>>>நுழைவுத் தேர்வுகளின் புதிய அம்சங்கள் எப்படி?

ஐஐடி, என்ஐடி மற்றும் ஐஐஐடி போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக, சி.பி.எஸ்.இ நடத்தும் தேர்வானது, ஆன்லைன் தேர்வாகவும் நடத்தப்படுவதில் இருக்கும் சாதக அம்சங்கள் இங்கே அலசப்படுகின்றன.
ஆன்லைனில் தேர்வெழுதுதல்
சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, ஒரு மாணவர், ஆன்லைனில் தேர்வெழுதுகிறோமா அல்லது ஆப்லைனில் தேர்வெழுதுகிறோமா என்பதை தன் விருப்பம்போல் முடிவு செய்து கொள்ளலாம். ஆப்லைன் தேர்வானது, 2013 ஏப்ரல் 7ம் தேதி நடத்தப்படுகிறது. முதல் தாளுக்கான ஆன்லைன் தேர்வு ஏப்ரல் 8 லிருந்து, ஏப்ரல் 30க்குள் நடத்தப்படுகிறது. ஆன்லைன் தேர்வில், அதிக மாணவர்கள் பங்கேற்கும் விதமான மாறுதல்களை CBSE செய்துள்ளது.
விண்ணப்பக் கட்டணம்
ஆன்லைன் தேர்வின் மிக முக்கியமான அம்சமே, விண்ணப்ப கட்டணம்தான். ஆப்லைனில், முதல் தாளை எழுதும், பொது மற்றும் OBC பிரிவு மாணவர்கள், ரூ.800 ஐ செலுத்த வேண்டும் மற்றும் ஆன்லைனில் தேர்வெழுதுபவர் ரூ.500 செலுத்த வேண்டும். இதே கட்டணம்தான், பெண்களுக்கும், SC/ST/PD பிரிவு மாணவர்களுக்கும் பொருந்தும்.
போக்குவரத்து சிரமங்கள்
ஜேஇஇ மெயின் தேர்வை ஆன்லைனில் எழுத, பெரு நகரங்களில் வாழும் மாணவர்களுக்கு எந்த சிரமமுமில்லை. ஆப்லைனில் எழுதும் தேர்வுக்கு, தேர்வு மையங்கள் தொடர்பாக 4 சாய்ஸ்கள் உள்ளன. CBSE வெளியிட்ட தகவல் அறிவிக்கையில், ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தேர்வுகளுக்கான மையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆப்லைன் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மையங்கள், ஆன்லைன் தேர்வில் இடம்பெறவில்லை. இதன்மூலம், பெருநகரங்களில் வாழும் மாணவர்கள், ஆன்லைன் தேர்வை தெரிவுசெய்து கொள்ளலாம்.
ஆன்லைன் விண்ணப்ப படிவம்
ஆன்லைன் விண்ணப்பம் என்பது, இம்முறை, CBSE செய்திருக்கும் ஒரு சிறந்த மாற்றம். ஒரு மாணவர், ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்தால், அதை அவர் ஆன்லைனில்தான் செய்ய வேண்டும். ஏதேனும் தேர்வு மையங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில், விண்ணப்ப படிவங்களைப் பெறுவதற்கு வழியில்லை.
CBSE -ன் இந்த புதிய திட்டமானது, தொலைதூர கிராமப் பகுதிகளில் வாழும் மாணவர்கள், இணைய கணிப்பொறி வசதியைப் பயன்படுத்தி, ஆன்லைன் விண்ணப்ப முறையைப் பின்பற்றுவதை ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும், ஜேஇஇ மெயின் தேர்வை, முழுமையாக ஆன்லைனில் நடத்தும் சாத்தியம் குறித்தும், ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
யாருக்கு சிக்கல்?
கணினி தொழில்நுட்ப விஷயத்தில், குறைந்த அறிவுபெற்ற மற்றும் அதில் ஆர்வமற்ற மாணவர்களுக்கு, CBSE -ன் புதிய மாற்றங்கள் சிக்கல் ஏற்படுத்துவதாக இருக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று CBSE தரப்பில் கூறப்படுகிறது. ஆனாலும், புதிய விதிமுறைகள், மாணவர்களை எந்த விதத்திலும் பாதிக்காமல் இருக்கும் பொறுப்பு, CBSE தேர்வு வாரியத்துக்கு உள்ளது.