பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் தேர்வை, ஆசிரியர் கல்விக்கான தேசிய
கவுன்சில் வழிமுறைப்படி நடத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்குப் பதிலளிக்கும் படி, அரசுக்கு, "முதல் பெஞ்ச்"
உத்தரவிட்டது. "மனு மீதான, இறுதி உத்தரவைப் பொறுத்து, நியமனங்கள் அமையும்"
எனவும் உத்தரவிட்டது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் எம்.பழனிமுத்து என்பவர், தாக்கல் செய்த
மனு: ஆசிரியர் தகுதி தேர்வில், மூன்று லட்சத்து, 73 ஆயிரத்து, 696 பேர்,
கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், 8,808 பேர், தேர்ச்சி
பெற்றனர்.
தேர்வு முடிவை, ஜாதி வாரியாகவும், பாட வாரியாகவும், வெளியிட தவறி விட்டனர்.
இதில், உள்நோக்கம் உள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர்,
பிற்படுத்தப்பட்டோர், மாற்று திறனாளிகளுக்கு, உண்மையை மறைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், ஒரு
அறிவிப்பை வெளியிட்டது. அதில், தகுதி மதிப்பெண்ணில், ஆதிதிராவிடர்,
பழங்குடியினர், மாற்று திறனாளிகளுக்கு, ஐந்து சதவீதம் தளர்த்தப்பட்டது.
அதன்படி, ஆந்திராவில், 10 சதவீதம், ராஜஸ்தானில், ஐந்து சதவீதம்,
தளர்த்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், தகுதி மதிப்பெண் தளர்வு
பற்றி, எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆசிரியர் கல்விக்கான தேசிய
கவுன்சிலின் வழிமுறைகளை பின்பற்றாமல், தேர்வு நடத்துவது, முடிவை
வெளியிடுவது, தவறானது.
எனவே, நியமன உத்தரவுகளை வழங்க, தடை விதிக்க வேண்டும். தேசிய கவுன்சிலின்
வழிமுறைகளை பின்பற்றி, பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான
தேர்வை நடத்த, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல்
பெஞ்ச்" முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு
உத்தரவிட்டு, விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு, "முதல் பெஞ்ச்"
தள்ளிவைத்தது.
"நியமனங்கள் எதுவும், ரிட் மனு மீதான இறுதி உத்தரவைப் பொறுத்து அமையும்" என, "முதல் பெஞ்ச்" உத்தரவிட்டது.