>>>பள்ளி ஆசிரியர்கள் விபரம்: இணையதளத்தில் பதிவு : கணக்கெடுப்பு தீவிரம்

தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர்களின் விபரம், கல்வி துறை இயக்குனரகம் மூலம், சேகரித்து இணையதளத்தில் பதிவு செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள், தற்போது பணியில் உள்ளவர்கள், பெயர், பிறந்த தேதி, பாலினம், பணியில் சேர்ந்த தேதி, பாடம், தற்போதைய பள்ளியில் சேர்ந்த தேதி, காலிபணியிடங்கள், ஆசிரியர்கள் அதிகம் அல்லது குறைவு போன்ற விபரங்களை சேகரித்து வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனி "ஐ.டி.' வழங்கப்பட்டு, விபரங்கள்  பதியப்படுகிறது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறை விபரத்தை, சென்னையிலிருந்தே உயரதிகாரிகள் நேரடியாக தெரிந்து கொள்ள முடியும். தலைமை ஆசிரியர்கள் பதவியேற்றவுடன், இந்த முகவரியில் பள்ளியின் நிலையை, அவ்வப்போது "அப்டேட்' செய்ய வேண்டும், என்றார்.