பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத, இணையவழி பதிவு செய்வதற்கான கடைசி
தேதியை, ஜனவரி இறுதி வரை நீட்டிப்பு செய்ய, தேர்வுத்துறை
திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதே நேரத்தில், இந்த புதிய திட்டம், வாபஸ்
பெறப்பட மாட்டாது எனவும், தேர்வுத் துறை திட்டவட்டமாக தெரிவித்தது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியரைப் பற்றிய விவரங்கள், இணையதளம் வழியாக
பதிவு செய்ய, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. மாணவ, மாணவியரைப் பற்றிய
விவரங்கள், ஏற்கனவே பல்வேறு திட்டங்களுக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்,
பள்ளிகளில் இருக்கின்றன. இவற்றை வைத்தே, இணையதளவழி பதிவிற்கான வேலைகளை,
அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே மேற்கொள்ள வேண்டும் எனவும்,
தேவைப்பட்டால், சம்பந்தபட்ட மாணவ, மாணவியரை அழைத்து, விவரங்களை பெறலாம்
எனவும், தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இந்த பதிவை, ஜனவரி, 4ம்
தேதிக்குள் செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை அறிவிப்பு செய்திருந்தது,
மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 10
லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் விவரங்களை, ஒரு வாரத்திற்குள் பதிவு
செய்ய முடியாது என்பது, ஆசிரியர்களின் கருத்தாக இருந்தது. மேலும், திடீரென,
கடைசி நேரத்தில், புதிய திட்டத்தை அமல்படுத்துவதை தவிர்த்து, பழைய
முறையில் விவரங்களைப் பெறவும், தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என,
ஆசிரியர்கள் வலியுறுத்தினர். இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர்
வசுந்தரா கூறியதாவது: இணையதள வழி பதிவு செய்யும் திட்டத்தை, எக்காரணம்
கொண்டும் வாபஸ் பெற மாட்டோம். மாணவர்களே, விவரங்களை பதிவு செய்ய வேண்டிய
அவசியம் கிடையாது. இருக்கிற விவரங்களை வைத்து, ஆசிரியர்களே, இணையதளத்தில்,
பதிவு செய்யலாம். அனைத்துப் பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் வசதி, இணையதள
வசதிகள் இருக்கின்றன. அறிவிப்பு வெளியான இரு நாட்களிலேயே, ஏராளமான பதிவுகள்
செய்யப்பட்டுள்ளன. ஜனவரி, 4ம் தேதிக்குள் பதிவாகும் எண்ணிக்கையின்
அடிப்படையில், தேதியை நீட்டிப்பது குறித்து, முடிவு செய்வோம். இவ்வாறு
வசுந்தரா தெரிவித்தார். இணையவழி பதிவு, ஜனவரி இறுதி வரை, நீட்டிப்பு
செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.