மலைவாழ் பள்ளி மாணவர்கள் சமர்பித்த ஆய்வுக்கட்டுரை, தேசிய குழந்தைகள்
அறிவியல் மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 30 ஆண்டு கால வரலாற்றில்,
மலை கிராம பழங்குடியின மாணவர்களின் ஆய்வுக் கட்டுரை அறிவியல் மாநாட்டுக்கு
தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை.
மத்திய அரசின்
அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை உதவியுடன், 1973 முதல் தேசிய
குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு வாரணாசியில்
டிசம்பர், 24ல் துவங்கி, 2013 ஜனவரி, 3 வரை நடக்கவுள்ளது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 20வது தேசிய
குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு, நவம்பர் 30, டிசம்பர் 1, 2ல் கோவை
மாவட்டம், காரமடையில் நடந்தது. மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார்
பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்றனர்.
"ஆற்றல்" எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை கோரப்பட்டது.
மாணவர்கள் குழுவினர், 180 ஆய்வுக்கட்டுரைகள் சமர்பித்தனர். 30 கட்டுரைகள்
தேர்வு செய்யப்பட்டு, தேசிய மாநாட்டுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பர்கூர் மலைக்கிராமம்,
தாமரைக்கரை, சுடர் உண்டு உறைவிடப்பள்ளியில் படிக்கின்ற, பள்ளி செல்லா
மற்றும் இடைநின்ற மாணவர்கள் அனுப்பிய ஆய்வுக்கட்டுரை தேர்வு செய்யப்பட்டது.
30 ஆண்டு கால வரலாற்றில், மலை கிராம பழங்குடியின
மாணவர்கள் கட்டுரை தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை. மாவட்ட கலெக்டர்
சண்முகம், மாணவ, மாணவியர் கணேஷ், வேலன், சின்னத்தம்பி, குமார்,
கலைச்செல்வி ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டினார்.