>>>இன்றைய பிள்ளைகள் தொலைத்திருக்கும் இயற்கை விஞ்ஞானிகள்

காகத்தை காணும் போதெல்லாம் தாய் கோழி ஒரு மாதிரி கொக்கரிப்பதும் , உடனே கோழி குஞ்சுகள் அலறி புடைத்து கொண்டு ஒளிந்து கொள்வதும் , அந்த பட்டிணத்து பிள்ளைகளுக்கு பெரும் அதிசயமாய் தெரிந்தது. ஓட்ட ஓட்டமாய் ஓடி போய் இந்த விஷயம் தாத்தாவிடம் பகிர பட்டது. லீவு விட்டால் கிராமத்துக்கு செல்லும் பிள்ளைகளுக்கு அது ஒரு ஆச்சரியமான உலகம். 'இயற்கையும், விஞ்ஞானமும் இரண்டற கலந்தவை' என அறிவிக்கும் பாடசாலை அது. கிராமத்து தாத்தாக்கள் எல்லோருமே இன்றைய பிள்ளைகள் தொலைத்திருக்கும் இயற்கை விஞ்ஞானிகள்.

காக்கை - கோழி கதையை கேட்ட தாத்தா கொஞ்சமும் அலட்டி கொள்ள வில்லை. சிரித்த படியே , அவர்களை மாட்டு தொழுவத்தின் ஒரு மூலைக்கு அழைத்து சென்றார். அங்கு இன்னொரு பெட்டை கோழி கூடை ஒன்றில் அடை படுத்திருந்தது . இவர்களை கண்ட உடனேயே , சிறகுகளை சிலிர்த்து கொண்டு 'கர்'ரென்று பெரும் ஓசையுடன்முனகியது . மெதுவாக அதை தூக்கிய தாத்தா இரண்டு முட்டைகளை மட்டும் எடுத்தார். அலுங்காமல் அவற்றை எடுத்து வந்து, ஒரு வழவழப்பான மேசை மேல் வைத்தார். அந்த முட்டைகள் அடை வைக்க பட்டு 19 நாட்கள் ஆகிறதென்றும், இன்னும் இரண்டொரு நாளில் அவை பொரித்து குஞ்சுகள் வெளி வரும் என்றும் பிள்ளைகளிடம் விளக்கினார். பின்னர் , காகத்தை கண்ட தாய் கோழி செய்யும் கொக்கரிப்பை போல தாத்தா ஒலி எழுப்பியதுதான் தாமதம்...மேசை மீது இருந்த முட்டைகள் தாமாகவே இங்கும், அ ங்கும் அலைந்து உருண்டன. குட்டி பையன்களோ, பிளந்த வாயை மூடவே இல்லை.

தாயை கண்டதுமில்லை....அதன் குரலை கேட்டதுமில்லை...காக்கையை அறிந்ததும் இல்லை...ஆனாலும், வளர்ந்த நிலையில் முட்டைக்குள் இருந்த குஞ்சுகள் ஆபத்தை அறிந்திருந்தன. இந்த மாதிரியான பாதுகாப்பு உணர்வுகள் தலைமுறைகள் கடந்த மரபு வழியாய் வந்தவை. ஆண்டவனின் அனுகிரகம் இப்படியெல்லாம் வியாபித்திருப்பதாலேயே கோழிகளும், பிற உயிர்களும் பூமியில் உலவுகின்றன. இயற்கை சமன் பாட்டில் இடமில்லாத உயிர்களிடமிருந்து இந்த அனுகூலமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் விடை பெறுகின்றன.