>>>நரேந்திர மோடி [Narendra Modi]....

 
நான்காவது முறையாக, குஜராத் முதல்வராக பதவியேற்க உள்ள, நரேந்திர தாமோதர் தாஸ் மோடி, குஜராத் மாநிலம், மேஹ்சனா மாவட்டத்தின் வத்நகரில், 1950 செப்., 17ல் பிறந்தார்.இவரது பெற்றோர் தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி - ஹூரா. பள்ளியில் படிக்கும் போதே, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் "அகில பாரதிய வித்யார்தி பரிஷத்' அமைப்பில் இணைந்து, ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள், அரசியல் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்றார். பின், பா.ஜ.,வில் சேர்ந்தார்.

இளம் வயதில் சகோதரருடன் இணைந்து, டீ கடை நடத்தினார். அரசியல் ஆர்வத்தால், குஜராத் பல்கலை கழகத்தில், "அரசியல் அறிவியலில்' முதுகலை பட்டம் பெற்றார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஆரம்பமே அசத்தல்:கடந்த, 1998ல் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் பொறுப்பாளராக, அத்வானியால் நியமிக்கப்பட்டார். இப்பணியை மோடி திறம்பட செய்து முடித்தார். குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் படேல், 2001 அக்., 6ம் தேதி ராஜினாமா செய்தார்.இதையடுத்து, எம்.எல்.ஏ., வாக கூட இல்லாத மோடி, அக்., 7ல், முதல்வராக பதவியேற்றார். பின், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2002 பிப்., 27ல், "கோத்ரா ரயில் எரிப்பு' சம்பவத்தை தொடர்ந்து, குஜராத்தில் கலவரம் ஏற்பட்டது.

இதையடுத்து மோடி, ராஜினாமா செய்தார். அதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார்.நீண்ட கால முதல்வர்குற்றச்சாட்டுகளை மனதில் கொள்ளாமல், மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டார். குஜராத்தை பல துறைகளிலும், முன்மாதிரி மாநிலமாக மாற்றிக் காட்டினார். 2007 தேர்தலிலும் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக முதல்வரானார். குஜராத்தில், நீண்டகாலம் முதல்வராக இருந்தவர் என்ற சாதனையையும் படைத்தார்.

திட்டங்கள்:குஜராத் மின் மிகை மாநிலமாக உள்ளது. சோலார் மின் உற்பத்தியில், (2,000 மெகாவாட்) நாட்டில் முன்னணியில் உள்ளது. இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதை தடுக்கும் வகையில், "குட்கா'வுக்கு தடை விதித்துள்ளார்.மும்பை தாக்குதலுக்குப் பின், குஜராத் கடலோர பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தியுள்ளார். சமீபத்தில், ஆன் லைனில் இளைஞர்களுடன், மோடி நேரடியாக கலந்துரையாடினார். அரசியல்வாதி ஒருவர், இம்மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது இதுவே முதல்முறை. சமூக வலைதளமான, "டுவிட்டரில்' இவரை, 11 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

விருதுகள்:இந்தியா டுடே நாளிதழ், "இந்தியாவின் சிறந்த முதல்வர்' என்ற விருதை, 2006ல் வழங்கி கவுரவித்தது. குஜராத்தில், கம்ப்யூட்டர் துறையில், இவர் ஏற்படுத்திய வளர்ச்சியின் காரணமாக, கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பு,"இ-ரத்னா' விருதை வழங்கியது. 2009ம் ஆண்டுக்கான, "ஆசியாவின் சிறந்த எப்.டி.ஐ., பெர்சனாலிட்டி' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது தன் தலைமையில், மூன்றாவது முறையாக, சட்டசபை தேர்தலை எதிர்கொண்டு, "ஹாட்ரிக்' வெற்றி பெற்றுள்ளதோடு, நான்காவது முறையாக, முதல்வராக பதவியேற்க உள்ளார். 2007ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, "மரண வியாபாரி' என, காங்கிரஸ் தலைவர் சோனியாவால், விமர்சிக்கப்பட்டவர்.கடந்த, 22 ஆண்டு காலமாக, குஜராத் மாநிலத்தில், ஆட்சி, அதிகாரத்தை பிடிக்க முடியாமல் தவிக்கும், காங்கிரசை மீண்டும் மண்ணைக் கவ்வச் செய்துள்ளார்.