பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள், பிப்ரவரி 1ம் தேதி தொடங்கி, 23ம் தேதி
வரை நடைபெறுகின்றன. இவற்றில், பல்வேறு பாடப் பிரிவுகளைச் சேர்ந்த 4 லட்சம்
மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் மாதம் 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடக்கின்றன. இவற்றை மொத்தம் 8 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
அறிவியல் உள்ளிட்ட குறிப்பிட்ட பாடப் பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு,
பிப்ரவரி 1 முதல் 23 வரை, செய்முறைத் தேர்வுகளை நடத்த தேர்வுத்துறை
உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்முறைத் தேர்வானது, மாவட்ட அளவிலான பொதுத்தேர்வாக நடக்கும்.
அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், செய்முறைத் தேர்வுக் கேள்விகளை
வடிவமைத்து, பள்ளிகளுக்கு வழங்குவர்.
மாவட்டங்களில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பல கட்டங்களாக
செய்முறைத் தேர்வை நடத்திக் கொள்ளலாம். அனைத்து செய்முறைத் தேர்வுகளையும்,
பிப்ரவரி 23ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென தேர்வுத்துறை
அறிவுறுத்தியுள்ளது.
செய்முறைத் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, ஓரிரு நாட்களில்
பதிவெண் குறித்து அறிவிக்கப்படும். இதே பதிவெண்களைப் பயன்படுத்தி,
மார்ச்சில் துவங்கவுள்ள, எழுத்துத் தேர்வையும் எழுத வேண்டும்.
கடந்த தேர்வானது மொத்தம் 1,900 மையங்களில் நடந்தது. ஆனால் இந்தாண்டு,
மொத்தம் 2,100 மையங்களில் இத்தேர்வு நடக்கலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான
கடைசித் தேதி இந்த வாரத்துடன் முடிந்துவிடும் என்றும், இதுவரை, 70
மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தேர்வுத்துறை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.