>>>உளுந்தூர்பேட்டை இளைஞர்கள் சாதனை: வீடுகளுக்கு பயன்படுத்த ரூ.6 ஆயிரம் செலவில் காற்றாலை மின்சாரம்

தமிழகத்தில் தற்போது மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழில் நிறுவனத்தினர், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் தங்களின் மின்சார தேவைகளுக்கு ஜெனரேட்டர் மற்றும் “இன்வெட்டர்” ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

ஏழை, எளிய மக்கள் மின்சாரத்திற்கு பதிலாக மண்எண்ணை விளக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த வாலிபர்கள் சுரேஷ், ராமு ஆகியோர் ரூ. 6 ஆயிரம் செலவில் காற்றாலை தயாரித்து அதன் மூலம் தங்கள் வீடுகளில் மின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். சுரேஷ் தொழிற்கல்வி பாடப்பிரிவில் எலக்ட்ரீஷியன் படித்துள்ளார். ராமு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து மின் தட்டுப்பாட்டை போக்க காற்றாலை மூலம் புதிய மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டனர். ஆனால் அதற்கு உதிரி பாகங்கள் கிடைக்காததால் அதையும் தாங்களே உற்பத்தி செய்ய முடிவு செய்தனர்.

இதற்காக சுரேஷ் வீட்டின் மேல் மாடியில் 15 அடி உயர கம்பம் வைத்து அதில் 3 பி.வி.சி., பிளாஸ்டிக் பைப்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இறக்கையை பொறுத்தினார்கள். அதில் மேல் பக்கம் கிரைண்டருக்கு பயன்படுத்தும் சக்கரத்தையும், கீழே டைனமோ வைத்து அதன் ஒரு பகுதியில் சிறிய அளவிலான சக்கரத்தையும் வைத்துள்ளனர். மேலே உள்ள சக்கரத்திற்கும், கீழே உள்ள சக்கரத்திற்கும் ஒரு பெல்ட் மூலம் இணைப்பு கொடுத்துள்ளனர். இதனால் இறக்கை காற்றின் வேகத்திற்கு ஏற்றவாறு சுற்றும் போது அதன் மூலம் டைனமோ மின்சாரத்தை தயாரிக்கிறது.

அதிலிருந்து ஒரு மின் கம்பி கொண்டு வந்து பேட்டரியில் மின்சாரத்தை சேமிக்கிறது. அதை கொண்டு சுரேஷ் தனது வீட்டிற்கு தேவையான அளவு மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார். இதனால் மின்சாரம் இருக்கும் போது கூட சுரேஷின் வீட்டில் தயாரிக்கும் மின்சாரத்தை கொண்டே அதிக அளவு பயன்படுத்தி வருகிறார். இதனால் மாதம் ரூ.600 மின்கட்டணம் செலுத்தி வந்த சுரேஷ் தற்போது தனது வீட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிக அளவு பயன்படுத்தி வருவதால் இந்த மாதம் ரூ. 200 மட்டுமே மின்கட்டணம் கட்டியுள்ளதாக தெரிவித்தார்.

இன்வெட்டர், ஜெனரேட்டர், சோலார் என பல்வேறு சாதனங்களை வாங்கினால் அதிக அளவு செலவு செய்ய வேண்டிய நிலையில் வெறும் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவழித்து குறுகிய இடத்தில் காற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து வருகின்றார்கள். இதை அனைவரின் வீடுகளிலும் பயன்படுத்தலாம் என கூறுகிறார், ராமு.

மேலும் கடலோர பகுதிகளில் அதிக அளவு காற்று அடிப்பதால் அந்தப்பகுதியில் உள்ளவர்களின் வீடுகளில் அனைத்து தேவைகளுக்கும் காற்றை கொண்டு தயாரிக்கும் மின்சாரத்தை பயன்படுத்தலாம் என்கிறார். இதற்கு தேவையான உதிரி பாகங்கள் கிடைக்காத நிலையில் இதை அதிக அளவு தயார் செய்ய முடியவில்லை என்றும் இதற்கு தேவையான பொருட்களை தனியார் நிறுவனங்கள் செய்து கொடுத்தால் அதிக அளவு உற்பத்தியை கொடுக்க முடியும் என்றும் கூறுகிறார்.

சுரேஷ் வீட்டின் மேல் அமைக்கப்பட்டள்ள மின்சாரம் தயாரிக்கும் காற்றாடியை உளுந்தூர்பேட்டையை மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வந்து பார்த்து செல்கின்றனர்.