நாடு முழுவதும் நடந்த, தேசிய விரிவுரையாளர் தகுதித் தேர்வை, சுமார் 8
லட்சம் பேர் எழுதினர். சென்னையில், எத்திராஜ் கல்லூரி உட்பட, 10 இடங்களில்
அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில், 12,500 பேர் தேர்வெழுதினர்.
பல்கலைக்கழக மானியக் குழு
(யு.ஜி.சி.,) சார்பில், தேசிய விரிவுரையாளர் தகுதித் தேர்வு (நெட்), சென்னை
உட்பட, நாடு முழுவதும் நேற்று நடந்தது. இந்த தேர்வில், விரிவுரையாளர்
தகுதி பெற, புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. தேர்வுக்காக,
மொத்தம், 77 மையங்கள் அமைக்கப்பட்டன. இதில், 7.8 லட்சம் பேர் பங்கேற்று,
தேர்வெழுதினர்.
மூன்று தாள்களைக் கொண்ட தேர்வு, காலை, 9:30 மணிக்கு துவங்கி, மாலை, 4:00
மணி வரை நடந்தது.புதிய விதிமுறைஇந்த தேர்வில் விரிவுரையாளராக தகுதி பெற,
புதிய விதிமுறைகளையும் பல்கலைக்கழக மானியக்குழு அமல்படுத்தி உள்ளது.
அதன்படி, தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு, பாட வாரியாக தகுதி பட்டியல்
தயாரிக்கப்படும்.
அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து, முதல், 15 சதவீதம்
பேர் மட்டுமே, விரிவுரையாளர் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். இளம்
ஆராய்ச்சியாளருக்கான உதவித் தொகை வழங்க, இவர்களிலிருந்து தனியாக தகுதி
பட்டியல் தயாரிக்கப்படும் என, பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.
கடந்த தேர்வில், தேர்ச்சி விதிமுறைகளை மாற்றியதைத் தொடர்ந்து, தேர்வு
முடிவுகளை வெளியிடுவதில், பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. இந்நிலையில், நேற்று
புதிய விதிமுறைகளின்படி தேர்வு நடந்துள்ளது. தேர்வுக்கான முடிவுகள், ஒரு
மாதத்திற்குள் வெளியிடப்படும் என, பல்கலைக்கழக மானியக்குழு வட்டாரங்கள்
தெரிவித்தன.