>>>விஞ்ஞானிகளை இந்தியாவுக்கு வரவழைக்க மத்திய அரசு திட்டம்

வெளிநாடுகளில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும், இந்திய விஞ்ஞானிகளை, மீண்டும் தாயகத்துக்கு பணியாற்ற அழைப்பதற்காக, சில சலுகை திட்டங்களை, மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான விஞ்ஞானிகள், வெளிநாடுகளில், பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவையாற்றி வருகின்றனர். இவர்களின் சேவையால், அந்த நாடுகளுக்கு, ஏராளமான பயன்கள் கிடைக்கின்றன.
இதுபோன்ற, சிறந்த இந்திய விஞ்ஞானிகளை, மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்ப வைக்கும் வகையில், அவர்களுக்கு, பல்வேறு சலுகை திட்டங்களை, மத்திய அரசு அறிவிக்கவுள்ளது.
இதன்படி, வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகள், குறிப்பிட்ட துறையில், சர்வதேச அளவில், நிபுணத்துவம் பெற்றிருந்தால், அவர்களை நாட்டின் நலனுக்கு பயன்படும் ஆராய்ச்சிக்கு, பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
குறைந்தபட்சம், ஒரு ஆண்டிலிருந்து, அதிகபட்சம், மூன்று ஆண்டுகள் வரை, இந்த ஆராய்ச்சி நடக்கும். இதற்கு தேர்வு செய்யப்பட்ட விஞ்ஞானிகளுக்கு, ஆண்டுக்கு, 55 லட்சம் ரூபாய், உதவித் தொகை அளிக்கப்படும்.
இதுதவிர, அனைத்து வசதிகளுடன் கூடிய, வீடு மற்றும் இதர செலவுகள் அளிக்கப்படும். இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய திட்ட கமிஷன் துணை தலைவர், மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில், இதுகுறித்த ஆலோசனை கூட்டம், சமீபத்தில் நடந்தது. இதையடுத்து, மத்திய அரசின் அறிவியல் துறை செயலர்களுக்கு, இது தொடர்பாக, சுற்றறிக்கையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.