>>>பஞ்சாபின் சிங்கம்!

 
லாலா லஜ்பத் ராய்... எளிமையான ஏழை குடும்பத்தில் பிறந்த இவரின் அப்பா அரசுப் பள்ளி உருது ஆசிரியர். பள்ளியில் தன்னுடைய வியத்தகு திறமையால் ஆசிரியர்களை கவர்ந்தார். வகுப்பில் சிறந்த மாணவராக திகழ்ந்தார். லாகூர் அரசு கல்லூரியில் சட்டம் பயிலும்பொழுது குடும்ப வறுமை இரண்டாண்டுகள் அவரை கல்லூரி போக விடாமல் தடுத்தது. அப்பொழுது இந்தியாவின் பழம்பெருமைகளையும், எண்ணற்ற வீரர்களின் கதைகளையும் படித்து உத்வேகம் பெற்றார்.

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேச விடுதலைக்கு போராட ஆரம்பித்தார்; நல்ல எழுத்தாளரும் ஆன இவர் இத்தாலியின் விடுதலைக்கு காரணமான மாஜினி, கரிபால்டி ஆகியோரின் வரலாற்றை சுவைபட நூலாக்கினார். மத்திய மாகாணங்களை 1896இல் பஞ்சம் தாக்கிய பொழுது மக்களுக்கு எண்ணற்ற உதவிகள் செய்தார்.

மூன்று வருடங்களுக்கு பின் 1899இல் மீண்டும் பெரும்பஞ்சம் தாக்கியபொழுது பெருவருமானம் ஈட்டித்தந்த வக்கீல் தொழிலை ஒரு பக்கம் வைத்துவிட்டு நாட்டுப்பணியில் இறங்கிவிட்டார். 1905இல் இங்கிலாந்தில் பொதுத்தேர்தல் நடந்தபொழுது அதில் இந்தியாவின் பிரதிநிதிகளாக இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒருவர் காந்தியின் அரசியல் குரு கோகலே, இன்னொருவர் லஜ்பத் ராய்.

நீர் வரியை அரசு இரண்டாண்டுகள் கழித்து அரசு அதிகமாக்கியபொழுது மக்களை திரட்டி எண்ணற்ற போராட்டங்களை நடத்தினார் இவர். நில வரி ஏற்றமும் வரவே அதை எதிர்த்தும் குரல்கள் எழுந்தன. அந்நேரம் பார்த்து ஒரு பஞ்சாபிய பத்திரிகையாளர் மறைய அரசு இவரையும் கூடவே பகத் சிங்கின் உறவினர் அஜித் சிங்கையும் நாடு கடத்தியது. கட்சி இதற்கு பிறகு மிதவாதிகள் தீவிரவாதிகள் என இருபிரிவாக உடைந்த பொழுது தீவிர போக்குடைய லாலா லஜ்பத் ராய், பிபின் சந்திர பால், பால கங்காதர திலகர் ஆகிய மூவரும் LAL, BAL, PAL என அழைக்கப்பட்ட இம்மூவரை கண்டு அரசு பெரிதும் அஞ்சியது.

இங்கிலாந்து நாடாளுமன்றம் போக கிளம்பிய இவர் உலகப்போர் வந்ததால் அமெரிக்கா போனார்; அங்கு விடுதலைக்கு ஆதரவு திரட்டினார். நாட்டை புகழ்ந்து நூல்கள் இயற்றினார். அவர் காங்கிரசிற்குள் தொழிலாளர் சங்கத்தை ஆரம்பித்தார்; தொழிலாளர் நலனுக்காக போராடினார். 1920 இல் நாடு திரும்பியதும் கல்கத்தா சிறப்பு மாநாட்டில் காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியதும் அது முழு மனதோடு பங்கு கொண்டார்; பதினெட்டு மாத சிறைத்தண்டனை கடும் எதிர்ப்பால் இரண்டு மாதமாக குறைக்கப்பட்டது. எனினும், வெளியே வந்ததும் நள்ளிரவில் வேறு காரணம் சொல்லி கைது செய்யப்பட்டார். பின் 1927 இல் சைமன் கமிஷன் இந்தியர்களுக்கு ஆட்சியில் உரிமை வழங்க அமைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது; அதில் ஒரு இந்தியர் கூட இல்லாதது கொதிப்பை உண்டு செய்தது. சைமனே திரும்பிப்போ என நாடே போராடியது; லாலா லஜ்பத் ராயும் தீர்க்கமாக உடல்நிலை மங்கியிருந்த காலத்திலும் போராடினார். அவரின் மீது ஆங்கிலேய லத்திகள் பாய்ந்தன; பலமான அடிகள் விழுந்தன .சான்டர்ஸ் எனும் போலீஸ் அதிகாரியே அதை செய்தவன்; அப்பொழுது கூட அகிம்சையை கைவிடாமல், "என் மீது விழும் ஒவ்வொரு அடியும் உங்கள் சவபெட்டியில் நீங்கள் அடித்துக்கொள்ளும் ஆணி!"என ஆங்கிலத்தில் கம்பீரமாக சொன்னார். பதினேழு நாள் போராட்டத்துக்கு பிறகு இறந்து போனார் அவர்.

அவரை, "சூரியன் உள்ளவரை அவர் புகழ் நிலைத்து நிற்கும்" என காந்தி புகழ்ந்தார். அவரின் நினைவு தினமான நவம்பர் 17-ஐ தியாகிகள் தினமாக ஒரிசா அனுசரிக்கிறது.

லாலா லஜ்பத் ராய் பிறந்த தினம் இன்று (ஜன.28). அவரை நினைவு கூர்வோம்!