>>>மருத்துவ படிப்பு இடங்களை அதிகரிக்கும் விண்ணப்பம்: ஐகோர்ட் உத்தரவு

"மருத்துவப் படிப்புக்கான இடங்களை, 150 ஆக அதிகரிக்க, அனுமதி கோரி, தனியார் கல்லூரி அளித்த விண்ணப்பத்தை, எட்டு வாரங்களில் பரிசீலித்து, இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, குரோம்பேட்டையில், பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான இடங்களை, 100ல் இருந்து, 150 ஆக, உயர்த்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என, விண்ணப்பித்தது. மாநில அரசு ஆய்வு செய்து, அத்தியாவசிய சான்றிதழை, 2007ம் ஆண்டு வழங்கியது.
ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில், இடங்களின் எண்ணிக்கையை உயர்த்த மறுத்து விட்டது. சில குறைபாடுகளை, இந்திய மருத்துவ கவுன்சில் சுட்டிக் காட்டியது. அவற்றை நிவர்த்தி செய்து, கல்லூரி தரப்பில் மீண்டும் விண்ணப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, மாநில அரசிடம் இருந்து, புதிதாக அத்யாவசிய சான்றிதழை பெற வேண்டும் என, கவுன்சில் வலியுறுத்தியது. அதை எதிர்த்து, ஐகோர்ட்டில், பாலாஜி மருத்துவக் கல்லூரி சார்பில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
கடந்த ஆண்டு, அக்டோபரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், அப்பீல் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கல்லூரி சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜரானார்.
மனுவை விசாரித்த, தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் அடங்கிய, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: மருத்துவ கவுன்சிலின் கடமைகள், பணிகளை ஆற்ற, அந்த கவுன்சிலின் இயக்குனர்கள் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், சட்டத்தில் புதிய பிரிவுகளை கொண்டு வர, எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.
அத்தியாவசிய சான்றிதழ், எத்தனை ஆண்டுகளுக்கு செல்லும் என, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் மற்றும் விதிமுறைகளில், வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. எனவே, புதிதாக அத்தியாவசிய சான்றிதழ் வேண்டும் என, வலியுறுத்தாமல், இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தக் கோரிய விண்ணப்பத்தை, தகுதி அடிப்படையில், எட்டு வாரங்களுக்குள் பரிசீலித்து, உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.