>>>ஸ்டீவ் ஜாப்ஸ்-சின் ரோல் மாடல்!

 
அகியோ மோரிடா... இணையற்ற தொழில்நுட்பத்தால் உலகைப் புரட்டிய பிதாமகர். இயற்பியல் பட்டதாரியான இவர், ஜப்பானின் சார்பாக உலகப் போர் சமயத்தில் கப்பற்படையில் பணியாற்றினார்.

பதினான்கு தலைமுறை மதுபானம் தயாரிக்கும் குடும்ப பிசினசை வேண்டாம் என்று 375 டாலர் பணத்தோடு வெளியே வந்தார். உலகப் போருக்கு பின் அணுகுண்டுகளை வாங்கி நைந்து போயிருந்த தேசத்தை தொழில்நுட்பத்தால் தலைநிமிர்த்த முடியும் என்று இவரும், இபுகா எனும் இவரின் நண்பரும் நம்பினார்கள்.

கடந்த 1946-ல் டோக்கியோ டெலி கம்யுனிகேசன்ஸ் இன்ஜினியரிங் கார்ப்பரேசனை தொடங்கினார்கள். முதலில் மிகப் பெரிய டேப் ரெகார்டரை உருவாக்க அது கவனம் பெறவில்லை. பார்த்தார் மனிதர்... பெல் நிறுவனம் உருவாக்கி இருந்த ட்ரான்சிஸ்டரை உரிமம் பெற்று தங்களின் ரேடியோக்களில் இணைத்தார்கள். மாபெரும் வெற்றி பெற்றது அது. அளவில் சிறியதாக இருந்தது அதன் வெற்றிக்கு முக்கிய காரணம். அதையே எட்டு இன்ச் டிவி, வீடியோ ரெகார்டர் என விரிவாக்கி கொண்டே போனார்கள். உலகம் முழுக்க மேட் இன் ஜப்பான்
என்கிற சொல்லுக்கு ஒரு தனி கவுரவத்தை தந்தது இவரின் நிறுவனம்.

அமெரிக்காவை முற்றுகையிட ஒரு கவர்ச்சிகரமான பெயரை யோசித்தார்கள். இலத்தீனில் ஒலி என்பதற்கு சோனஸ் என பெயர்; அமெரிக்காவில் சோனி பாய்ஸ் என்பது பிரபலமான வாசகம். சோனி என பெயர் மாறியது ஜப்பானின் பீச்களில் பயணம் போகிற பொழுது மிகப்பெரிய ஸ்பீக்கர் கொண்டு போய் மக்கள் இசைகேட்பதை பார்த்தார்; நடந்துகொண்டே கேட்கும் வாக்மேனை உலகத்துக்கு தந்தார்; ஒரே ஆண்டில் ஒரு லட்சம் வாக்மேன்களை விற்காவிட்டால் தான் பதவி விலகுவதாக சொல்லி சாதித்தவர்.

அமெரிக்காவில் போய் செட்டில் ஆனார் இவர். ஜப்பானியர் என்கிற பெருமையை அவர் விடவில்லை. அமெரிக்கர்களை புரிந்து கொள்ளவே அங்கே போனார்; எந்த அளவிற்கு ஜப்பானை அவர் பெருமைபடுத்தினார் என்றால் அவரின் மறைவின் பொழுது சோனி அமெரிக்காவில் கோக கோலா ஜெனெரல் எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனிகளை விட மேலான இடத்தில் மக்களால் பார்க்கப்பட்டது.

தன் இறுதிக்காலம் வரை ஒரு மாதத்திற்கு எத்தனை கூட்டங்கள் இருந்தாலும் 17 நாட்கள் வேலை பார்ப்பதை தன் குறிக்கோளாக கொண்டிருந்தவர். தவறுகள் செய்ய அஞ்சாதீர்கள், ஆனால் அதே தவறை திருப்பி செய்யாதீர்கள் என்ற இவர்தான் ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு ரோல் மாடல். அவரின் ஒரு நூலின் தலைப்பு இப்படிதான் இருக்கும் முடியாது என்று சொல்லத் தெரியாத ஜப்பான் - அப்படித்தான் அவர் ஒற்றை பிராண்டின் மூலம் நாட்டை தலைநிமிர்த்தினார். அவரின் பிறந்த நாள் இன்று (ஜன.26).