>>>கலிலியோ கலிலி...

 
கலிலியோ கலிலி... இயற்பியலின் தந்தை. பள்ளியில் படிக்கிறபொழுது அரிஸ்டாட்டில் மனிதனின் பற்கள் 28 என சொன்னபொழுது எண்ணிப் பார்த்து இல்லை 32 என மறுத்தவர் இவர். அதுபோல வெவ்வேறு எடை உள்ள பொருட்கள் உயரத்தில் இருந்து போடப்படும் பொழுது ஒரே சமயத்தில் வந்து விழும் என உறுதியாக அரிஸ்டாடிலின் கருத்துக்கு மாறாக சொன்னார்.

பிசா தேவாலயத்தில் சரவிளக்கு ஊசலாடுவதை பார்த்து, அதன் முன்னே மற்றும் பின்னே செல்வதற்கான ஊசல் நேரம் ஒன்றாக இருப்பதை தன் நாடித் துடிப்பை கொண்டு கண்டுப்பிடித்தார். தனி ஊசலை விளக்கினார். மருத்துவம் படிக்கப்போன இவர் இயற்பியலின் மீது காதல் கொண்டது வேடிக்கையான நிகழ்வு.

ஆஸ்டில்லோ ரிக்கியின் கணிதம் பற்றிய சுவையான ஒரு பேச்சை கேட்டு ஈர்க்கப்பட்டு இயற்பியல் சார்ந்து இயங்க ஆரம்பித்தார். மன்னனின் மகன் கண்டுபிடித்த இயந்திரம் வீணானது என சொன்னது மருத்துவ பட்டத்தை அவர் பெறாமல் தடுத்தது. கணித பேராசிரியர் ஆனார். பீரங்கி குண்டின் இலக்கை ஆராய்ச்சியின் மூலம் சொன்னார்.

ஹான்ஸ் லிப்பர்ஹே என்பவர் குவிஆடியையும், குழி ஆடியையும் சேர்த்து வைத்து பார்த்தபோது தூரத்தில் உள்ள பொருட்கள் பக்கத்தில் இருப்பதுபோல் தெரிந்தது, அதை மேம்படுத்தி முப்பது மடங்கு பெரிதுபடுத்தி காட்டும் தொலைநோக்கியை உருவாக்கி சூரியனில் உள்ள புள்ளிகள், வியாழனின் நான்கு நிலவுகள், சூப்பர் நோவா, பால்வெளி மண்டலத்தின் பல்வேறு நட்சத்திரங்கள், நிலவின் கரடுமுரடான மேற்பரப்பு எல்லாமும் அவரின் கண்களில் பட்டு உலகுக்கு சொல்லப்பட்டபொழுது பிரபஞ்சத்தின் பிரமாண்டம் புரிந்தது.

தெர்மாமீட்டருக்கு முன்னோடியான தெர்மோஸ்கோப், ராணுவ திசைகாட்டி என பலவற்றை உருவாக்கினார். ஆனால், கோபர்நிக்கஸ் சொன்ன பூமி சூரியனை சுற்றிவருகிறது என்கிற கருத்தை தன் நூலில் வலியுறுத்தியதால் வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். மன்னிப்பு கேட்ட பின் விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் எழுதிய நூல்களிலும் அவ்வாறே எழுத அவரை வீட்டுக்காவலில் வைத்தார்கள். கண்பார்வை மங்கியது மருத்துவம் பார்க்க விடாமல் முழுகுருடர் ஆக்கினார்கள் மதவாதிகள். இறுதியில் தன் எழுபது வயதில் தான் எழுதிய புத்தகம் நெஞ்சில் படர்ந்து இருக்க மீளாத்துயில் கொண்டார் இந்த மேதை.

(ஜனவரி 8: கலிலியோ கலிலி எனும் நவீன அறிவியல் மற்றும் இயற்பியலின் தந்தை மறைந்த தினம்.)