>>>தமிழில் கையெழுத்திட்ட காந்தி...

தமிழ் மக்களோடு தொடர்பு கொண்டு தமிழர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு தென் ஆப்பிரிக்காவில் அவர்களுக்காகப் பாடுபட்ட காந்தி அடிகளாருக்கு நண்பராக விளங்கிப் பல போராட்டங்களிலும் ஈடுபட்டவர் தில்லையாடி டி.சுப்பிரமணிய ஆசாரி. அவர் தாயார் உடல்நலமில்லாமலிருந்தபோது காந்திஜி தென் ஆப்பிரிக்காவிலிருந்து 10 ரூபாய் பணவுதவி அனுப்பினார் அதில் காந்தி அடிகள் சுப்பிரமணிய ஆசாரிக்குத் தம் கைப்படத் தமிழில் கடிதம் எழுதினார். இக்கடிதத்தில் ஆவணி மாதம் என்று தமிழ் மாதத்தைக் குறிப்பிட்டு எழுதி இருப்பதும் தமிழில் கையொப்பமிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் பாரதி மணிமண்டபம் அமைத்தபோது அதற்கான வாழ்த்தைத் தமிழில் எழுதினார். இவற்றைத் தவிர நீரில் எழுத்தொக்கும் யாக்கை என்பதையும் தமிழில் தம் கைப்பட எழுதியுள்ளார். மோ.க.காந்தி என்று பல சந்தர்ப்பங்களில் தமிழில் கையெழுத்திட்டுள்ளார்.

திருவள்ளுவர், ஒளவையார், கம்பர் மாணிக்கவாசகர், நந்தனார், தாயுமானவர் முதலிய தமிழ் ஞானிகளை அவர் முழுமையாக அறிந்திருந்தார்

தமிழ்நாட்டுக்கு பல முறை காந்தி அடிகள் வருகை புரிந்திருக்கிறார். தில்லையாடிக்குச் சென்று தம் நண்பர் சுப்பிரமணிய ஆசாரியை 1-5-1915 இல் அவர் இல்லத்தில் சந்தித்திருக்கிறார்.

மறுநாள் 2-5-1915 இல் அவருக்கு மயிலாடுதுறையில் தமிழ் மக்கள் பெரிய வரவேற்பை அளித்தனர். அவருக்கு அளித்த வரவேற்பு இதழ் ஆங்கிலத்தில் அமைந்திருந்தது. மகாத்மா ஆத்திரப்பட்டுச் சொன்னார். காங்கிரஸ் திட்டங்களில் சுதேசி பற்றிய தீர்மானம் இருக்கிறது. நீங்களோ உங்களுடைய வரவேற்பு உரையை ஆங்கிலத்தில் அச்சிட்டிருக்கிறீர்கள். ஆங்கிலத்தின் மீது எனக்கு வெறுப்புக் கிடையாது.

ஆனாலும் தாய்மொழியைக் கொன்றுவிட்டு அதன்மீது (சமாதியின் மீது) ஆங்கில மொழியை வளர்த்தீர்களானால் நீங்கள் சரியான முறையில் சுதேசியத்தைக் கடைபிடிக்கவில்லை என்பதுதான் பொருள் என்று பேசினார்.