>>>இப்னு சீனா...

 
மருத்துவர்களின் முன்னோடி இப்னு சீனா பற்றி அறிந்திராத தகவல்கள் இதோ உங்களுக்காக ........!

மருத்துவர்களின் இளவரசன் (Prince Of Physicians) என்று அடைமொழி சூட்டப்பட்ட அபூ அலி ஹுசைன் இப்னு அப்துல்லாஹ் இப்னு சீனா கி பி (980 – 1036) மருத்துவ துறையின் மாமேதையாக விளங்கினார். இப்னு சீனா 10 ம் வயதிலையே இஸ்லாமிய அடிப்படை அறிவை பெற்று திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தார். இவர் இளம் வயதிலையே பல்வேறு ஆசிரியர்களிடம் அல் ஜிப்ரா, வான சாஸ்திரம், தர்க்கவியல், தத்துவம், இறையியல் என்று பல்வேறு விசயங்களை கற்றுக் கொண்டார்.

இவர் தனது 16 ம் வயதில் மருத்துவத்தில் கவனம் செலுத்தினார். இவர் 18 ம் வயதில் புகழ்பெற்ற மருத்துவராக விளங்கினார். மன்னர் நூஹ் இப்னு மன்சூர் சாமாணி என்பவர் நோய்வாய் பட்டிருந்தபோது அவரது நோயை குணப்படுத்த முடியாமல் பல்வேறு மருத்துவர்கள் திரும்பிச் செல்லவே, இறுதியாக இப்னு சீனா அழைக்கப்பட்டார். மன்னரின் நோயை குணப்படுத்தினார் இப்னு சீனா. குணமாகிவிட்ட மகிழ்ச்சிப் பெருக்கால் மன்னர் யாருக்கும் அனுமதிக்காத தனது அரச நூலகத்தை பயன்படுத்தும் உரிமையை இப்னு சீனாவிற்கு வழங்கினார். தனது சிகிச்சைக்கு கைமாறாக இதனை கருதிய இப்னு சீனா, அந்நூலகத்தில் பொதிந்திருந்த அரும்பெரும் நூல்களை எல்லாம் கற்று பயன் அடைந்தார்.

இப்னு சீனா கிட்டத்தட்ட 200 நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் மருத்துவ நூல்கள் மட்டும் 16 ஆகும். இதில் 8 நூல்கள் செய்யுள் வடிவில் அமைந்துள்ளன. அவர் எழுதிய நூல்களிலே உலகப் புகழ்ப்பெற்ற நூல் அல் கானூன் பித்திப் ஆகும்.

இந்நூல் 1270 ல் ஹீப்ரு (யூதர்களின்) மொழியிலும் லத்தின் மொழியிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு உள்ளது. இதன் லத்தின் மொழியாக்கம் ஐரோப்பாவில் வெளியிடப்பட்டதிலிருந்து 30 பதிப்புகளை கண்டுள்ளது.

15 ம் நூற்றாண்டில் இந்நூல் குறித்து பல்வேறு விளக்கவுரை நூல்கள் வெளிவந்துள்ளன. இந்நூலில் உள்ள உடற்கூறு பகுதி மட்டும் நீக்கப்பட்டு, டாக்டர்.O . C Gruner என்பவரால் 1930 ல் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது என்றால் இந்த 21 ம் நூற்றாண்டு வரை நீடித்து நிற்கும் இதன் செல்வாக்கை புரிந்துக் கொள்ளலாம்.

இவ்வாறு இப்னு சீனா எழுதிய "அல் - கானூன் பித்திப்" என்ற மருத்துவ கலைக்களஞ்சியம் 15 ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய பல்கலைகழகங்களின் மருத்துவ பாடத்திட்டத்தில் முக்கிய நூலாக சேர்க்கப்பட்டிருந்தது.

பிரான்ஸ் நாட்டில் அமைந்து இருக்கும் பாரிஸ் மருத்துவ பல்கலைகழகத்தில் இவரது பெயரில் ஆய்வகம் ஒன்று அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.