>>>டெட்டி பியர் எனும் பொம்மைக்கு அந்த பெயர் தந்த மனிதர் தியோடர் ரூஸ்வல்ட்

 
ஜன.6 : பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்த டெட்டி பியர் எனும் பொம்மைக்கு அந்த பெயர் தந்த மனிதர் தியோடர் ரூஸ்வல்ட் நினைவு தினம்.

ஜான் எஃப் கென்னடிக்கு முன் மிக இளம் வயதில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் இவர்.
ஜனாதிபதியின் மரணத்தால் துணை ஜனாதிபதியான இவர் அந்த இடத்துக்கு வந்தார். மிக இளம் வயதில் நோபல் பரிசும் வாங்கியவர். அதெல்லாம் இல்லை விஷயம். காடுகளில் நன்றாக சுற்றுவார் இவர்; வேட்டை என்றால் அவ்வளவு உயிர்.

ஜனாதிபதி பதவியை விட்டு இறங்கியதும் அமேசான் காடுகள் பக்கம் போகிற அளவுக்கு காதல் இவருக்கு. ஒரு முறை ஜனாதிபதியாக இருக்கிற பொழுது மிஸிஸிபி மாகாணத்தில் கரடி வேட்டைக்கு போனார் மனிதர்; கரடியே மாகாணத்தில் இல்லை. மூன்று நாட்கள் தேடி களைத்து போனவரை வெறுங்கையோடு அனுப்ப மக்களுக்கு விருப்பமில்லை; ஒரு வயதான கரடியை எங்கிருந்தோ கண்டுபிடித்துக்கொண்டு வந்து மரத்தில் கட்டி வேட்டையாடுங்கள் என்றார்கள் மனிதர் கருணை கொப்பளிக்க முடியாது பாவம் அது என சொல்லிவிட்டு போனார்.

இது அடுத்த சில தினங்களில் கார்ட்டூனாக வந்து விட்டது. அப்பொழுது மோரிஸ் மிச்டோம் தன் மனைவி உருவாக்கிய கரடி பொம்மைக்கு இவரின் செல்லப்பெயர் ஆன டெட்டி என்பதை வைத்துக்கொள்ளலமா என கேட்க இவரும் அனுமதி தந்தார். டெட்டி பியர் குழந்தைகளின் படுக்கையறை தோழன் ஆனது இப்படித்தான்.