>>>திறந்தநிலை பல்கலையில் படித்தால் சிக்கலா? : புதிய துணைவேந்தர் விளக்கம்

"தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் படித்து, அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், 107வது அரசாணையை நீக்குமாறு, முதல்வரிடம் வலியுறுத்துவேன்,'' என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் புதிய துணைவேந்தர் சந்திரகாந்தா கூறினார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி: தற்போது, திறந்தநிலை பல்கலையில், 110 வகையான கல்வி திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இவை இல்லாமல், காலத்திற்கு ஏற்றவாறும், தொழில்துறையினரின் தேவையை கருத்தில் கொண்டும், புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும், தலா ஒரு சமுதாய கல்லூரியை துவக்கி, ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, பல்வேறு வகையான வேலைவாய்ப்பு பயிற்சிகளை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில், சமுதாய கல்லூரியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. "வீடியோ கான்பரன்சிங்' வழியில், மாணவர்களுக்கு பாடங்களை நடத்தவும், நடவடிக்கை எடுக்கப்படும். திறந்தநிலை பல்கலையில் படித்தால், அரசு வேலைவாய்ப்புகளுக்கு தகுதியில்லை என்று கூறவில்லை. எனினும், 107வது அரசாணை, ஏற்கனவே படித்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அந்த அரசாணையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வரிடம் வலியுறுத்துவேன். எம்.எட்., படிப்பை மீண்டும் துவங்க, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சந்திரகாந்தா கூறினார்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, மூன்று ஆண்டு பட்டப்படிப்பு, பின், இரண்டு ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு என்ற வரிசைக்கு மாறாக, பள்ளிப் படிப்பை படிக்காமல், நேரடியாக பட்டப்படிப்பில் சேர்ந்து, பட்டங்களை பெற்ற பலர், அரசுப் பணிகளில் உள்ளனர். அதேபோல், படித்த பலர், அரசு வேலையை எதிர்பார்த்தும் இருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பான ஒரு வழக்கில், முறையான வரிசையில் படிக்காமல், நேரடியாக பட்டப்படிப்பு படித்தால், அது, அரசு பணிக்கு தகுதியானதாக கருதக் கூடாது என, தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது. இதை பின்பற்றி, 107வது அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை அமல்படுத்தினால், பல ஆயிரம் பேருக்கு பாதிப்புகள் வரும். தற்போது, இந்த அரசாணையை, திரும்பப் பெறுவது தொடர்பாக, முதல்வரிடம் வலியுறுத்துவேன் என, திறந்தவெளி பல்கலையின் புதிய துணைவேந்தர் சந்திரகாந்தா கூறியுள்ளார்.