>>>ஹாப்பி பர்த்டே டின்டின்...!

 
டின்டின் எனும் சாகாவரம் பெற்ற கதாபாத்திரம் முதன்முதலில் தோன்றிய தினம் இன்று (ஜனவரி 10).

ஹெர்ஜ் என்கிற மனிதர் 1929-ல் உருவாக்கி 55 வருடங்கள் வரைந்து தள்ளிய கதைகள்தான் இன்றைக்கு எழுபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கின்றன. ஒரு 17 வயது பத்திரிக்கை நிருபன், அழகான - புத்திசாலியான நாய், ஏகத்துக்கும் தங்கள் குழந்தைத்தனமான செயல்களால் அதிரடிக்கும் இரட்டையரான போலீஸ் அதிகாரிகள்... இவற்றோடு குற்றங்கள், உலகம் முழுக்க பயணம், துப்பறிதல் என்று எல்லாமும் சேர்ந்துகொண்டால் விறுவிறுப்புக்கா பஞ்சம்?

டின்டின் கதாப்பாத்திரம் முதலில் பெல்ஜிய நாட்டு பிரஜையாகதான் உருவானான். காலப்போக்கில் ஒட்டுமொத்த ஐரோப்பியாவுக்கும் உரியவனாக மாறிப்போனான். ஸ்னோயி எனும் அந்த நாய்க்குட்டியின் முதல் பெயர் மிலோ. டின்டினின் குடும்பத்தை பற்றி குறிப்புகள் எங்கேயும் வந்ததே இல்லை.

மொத்தம் இருபத்தி மூன்று காமிக் தொடர்களும், கூடவே முடிக்காமல் விட்டுப்போன டின்டின் மற்றும் ஆல்பா கலை எனும் தொடரையும் சேர்த்து 20 கோடி பிரதிகள் உலகம் முழுக்க விற்று தீர்ந்திருக்கின்றன.

எப்படி டின்டின் உருவானார் என்பதற்கு பல சுவையான மனிதர்களை சொல்கிறார்கள். அதில் பாலே ஹுல்ட் எனும் பதினைந்து வயது சிறுவன் 44 நாட்களில் உலகம் சுற்றி வந்ததும் ஒரு தாக்கம் என குறிக்கிறார்கள். லேட்டஸ்டாக ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ப்ளூரே தொழில்நுட்பத்தில் டின்டின்னை 3Dயில் காண்பித்தபொழுது ரசிகர்கள் மீண்டும் அவனோடு துப்பறிய போய்விட்டார்கள்.

ஹாப்பி பர்த்டே டின்டின்!