>>>பள்ளிகளில் தேர்வுகளுக்கான கட்டணத்தில் சலுகை கிடைக்குமா?

பள்ளிகளில் நடக்கும் பல்வேறு வகை தேர்வுகளுக்கான கட்டணத்தை, அரசு வழங்க முன்வர வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகள் அரசால் வழங்கப்படுகின்றன. காலணி, கல்வி கட்டணம் முதல் கம்ப்யூட்டர் வரை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இதனால் பள்ளி செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணமும் அரசால் செலுத்தப்படுகிறது.
இத்தனை சலுகைகளுடன், மேலும் ஒரே ஒரு சலுகையையும் அளித்து விட்டால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைவர். அது பல்வேறு வகை தேர்வு கட்டணம்தான். பள்ளிகளில் ஒரு ஆண்டில் காலாண்டு, அரையாண்டு, பருவத் தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள் உட்பட பல வகை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கென மாணவர்களிடம் 10 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இதற்கென உயர்நிலை அளவில் ஒரு தலைமை ஆசிரியரும், மேல்நிலையில் ஒரு தலைமை ஆசிரியரும் அமைப்பாளராக செயல்பட்டு, வினாத்தாள், தேர்வுத் தாளுக்கென கட்டணம் வசூலிக்கின்றனர்.
இதைக் கூட செலுத்த இயலாத நிலையில் கிராமப்புற, அரசு, மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பலர் உள்ளனர். கல்விக்காக பட்ஜெட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடும் அரசு, இந்தச் சிறிய தொகையையும் ஏற்றால், பெற்றோர் மகிழ்ச்சியடைவர்.