சில சந்தேகங்கள் நாம் அருந்தும் தண்ணீரைப் பற்றியது.
1.இரவில் தூங்க செல்லும் முன்னர் மிதமான சூட்டில் உள்ள சுடு தண்ணீர் அருந்திவிட்டு படுக்கச் செல்வது சரியா
2.அல்லது சுட வைத்த தண்ணீரை ஆற வைத்துதான் அருந்திவிட்டு தூங்க செல்லவேண்டுமா.3.பகலில் அதிக முறை குறைந்த தண்ணீர் அருந்துவது சரியான முறையா
4.அல்லது சில முறை குடித்தாலும் அதிக அளவு தண்ணீர் அருந்துவது சரியான முறையா.
5.மேற்கண்ட எல்லா முறையிலும் தண்ணீரை வெதுவெதுப்பான சூட்டில் அருந்துவதுநல்லதா.
6.அல்லது சூடான தண்ணீரை ஆற வைத்துத்தான் அருந்த வேண்டுமா.
பதில்.
எமது உடலின் செயற்பாடுகளுக்கு ஒட்சிசனுக்கு அடுத்ததாக அத்தியவசியாமான பொருள் நீர் என்றால் மிகையில்லை.ஆனாலும் அநேகமானோர் உடலின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் போதியளவு நீரை அருந்துவதில்லை. ஒவ்வொருநாளும் நாம் பல்வேறு விதாமாக உடலில் இருந்து நீரை இழந்துகொண்டிருக்கிறோம்.
சிறுநீர், சுவாசம், வியர்வை, மலம் என பல்வேறு வழிகளினூடாக நாம் நீரை தினம்தோறும் இழக்கிறோம். இந்த நீர் மீண்டும் நமது உடலைச் சேருவது நாம் அருந்தும் நீர் மூலமாகவும், உணவில் உள்ள நீர் மூலமாகும்.
ஒருவருக்கு ஒருநாளைக்கு தேவையான அளவு நீர் அவர் மேலே சொன்ன வழிமுறைகள் மூலம் இழக்கும் நீராகும். அதுதான் வியர்வையான காலத்தில் அதிகம் நீர் வியர்வை மூலம் இழக்கப் படுவதால் அதிக நீர் உடலுக்குத் தேவை என்பதால் தாகம் அதிகரிக்கின்றது.
ஒருவர் ஒருநாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என்பது அவரின் உடல் நிறை, அவர் வசிக்கும் காலநிலை, அவர் செய்யும் வேலையின் அளவு என்பவற்றில் தங்கியிருக்கிறது.
அண்ணளவாக ஒருவருக்கு ஒருநாளைக்குத் தேவைப்படுவது அவரின் ஒரு கிலோ உடல் நிறைக்கு 35ml நீராகும்.
இருந்தாலும் மேலே சொன்னதுபோல இந்த அளவு காலநிலை மாற்றம், மற்றும் வேலையின் அளவு என்பவற்றைப் பொருத்தும் மாறுபடும்.
சரியாக கணிக்கப்படாவிட்டாலும் அண்ணளவாக ஒருநாளைக்கு குறைந்தது இரண்டரை லீட்டர் நீராவது குடிப்பது அவசியமாகும்.
உங்களுக்குத் தேவையான இந்த நீரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அருந்தலாம்.
அதாவது சூடாகவோ, ஆறியதாகவோ அல்லது பழச் சாறாகவோ.
அதை உங்கள் விருப்பப் படி விரும்பிய அளவுகளில் குடித்துக் கொள்ளலாம்.(எத்தனை தடவையில் குடித்து முடிக்க வேண்டும் என்று கணக்கிடத் தேவையில்லை)
ஆனாலும் அளவுக்கதிகமாக ஒரேயடியாக நேரை குடிப்பதால் மற்றைய வேளைகளில் கவனம் குறையலாம்.
இரவிலே அதிகம் நீரை அருந்தினால் சிறுநீர் கழிப்பதற்காக நித்திரை குழம்ப வேண்டியும் ஏற்படலாம்.
மேலே சொன்னதெல்லாம் ஆரோக்கியமான ஒருவருக்குத் தேவையான நீரின் அளவாகும்.
வாந்தி, வயிற்றோட்டம், காய்ச்சல் ஏற்படும் காலங்களில் நீரிழப்பு அதிகரிப்பதால் இன்னும் அதிகமாக நீர் அருந்த வேண்டி ஏற்படலாம்.