முன்னொரு
காலத்தில், கிருஷ்ணபுரம் எனும் நாட்டில் மன்னன் ஒருவன் ஆட்சி செய்து
வந்தான். அவனுக்கு ஒரு கண் மட்டுமே தெரியும். மற்றொரு கண்ணில் பார்வை
கிடையாது.
ஒருநாள், மன்னனுக்கு தன்னை ஓவியமாகப் பார்க்க வேண்டும்
என்று ஆசை எழுந்தது. உடனே, "அமைச்சரே! என்னை ஓவியமாக வரைபவருக்கு ஆயிரம்
பொற்காசுகள் அளிக்கப்படும் என்று அறிவியுங்கள்" என்றார்.
தண்டோரா மூலம் நாடு முழுவதும் செய்தி அறிவிக்கப்பட்டது. வரதன், ராமன்
மற்றும் மஹிஷா என்ற மூன்று ஓவியர்கள் வந்தனர். வரதனும் ராமனும் மஹிஷாவை
கேலி செய்தனர். "நீ ஒரு பெண். உன்னால் எங்களை வெல்ல முடியாது" என்றார்கள்.
அவளோ இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.
மன்னர், மூவருக்கும் தன்னை
வரைவதற்காக ஆளுக்கொரு அறை ஏற்பாடு செய்திருந்தார். ஒருவர் வரைவது
மற்றவருக்குத் தெரியாது. ஆகவே, மூவரும் ஒவ்வொரு மாதிரியாக
வரைந்திருந்தார்கள். அவர்கள் வரைந்து முடித்தபின் மன்னர் அந்த ஓவியங்களை
காணச் சென்றார்.
முதலில் வரதன் வரைந்த ஓவியத்தைப் பார்த்தார்.
அதில் மன்னரின் ஒரு கண் பார்வை இல்லாமல் இருந்தது. இதை கவனித்த அரசர்
கோபமடைந்து, "என்னிடம் இருக்கும் குறையை இப்படியா வெளிப்படுத்துவாய்?"
என்று ஆத்திரத்துடன் கத்திவிட்டு வெளியேறினார்.
பிறகு ராமன்
இருந்த அறைக்குள் நுழைந்தார். அவன் மன்னருக்கு இரு கண்களுமே தெரியும்படி
வரைந்திருந்தான். மன்னர் மேலும் ஆத்திரப்பட்டார். "உள்ளதை உள்ளபடி வரை"
என்று அவனை விலக்கிவிட்டு மஹிஷாவின் ஓவியத்தை காணச் சென்றார்.
மஹிஷாவோ, மன்னரின் முகத்தை பக்கவாட்டில், அதாவது பார்வை இல்லாத கண்
தெரியாதபடி வரைந்திருந்தாள். மன்னர் முகம் மலர்ந்தது. "சபாஷ்! நீதான்
சாதுர்யத்துடன் செயல்பட்டிருக்கிறாய். உனக்கே பரிசு" என்று ஆயிரம்
பொற்காசுகளை கையில் கொடுத்தார்.
மஹிஷாவும் சந்தோஷமடைந்தாள்.