>>>தனிம அட்டவணையின் தந்தை! மென்டலீவ்...

 
மென்டலீவ்... மாபெரும் வேதியியலாளர். தனிம அட்டவணையை உருவாக்கியவர் இவரே. ரஷ்யாவில் பிறந்த இவர் அப்பா கண்பார்வை இழந்து வேலையை இழந்ததால் வறுமைக்கு தள்ளப்பட்டார்; அம்மா நடத்திய கண்ணாடி தொழிற்சாலை தீவிபத்தில் சிக்கி, அப்பா இறந்து போன சூழலில் தானே வாழ்க்கையில் போராடி ஜெயிக்க வேண்டும் என உணர்ந்தார் இவர். நடுவில் காசநோய் தாக்க மீண்டும் போராடி மீண்டார்.

வேதியியலில் ஆர்வம் உண்டானது. ஆல்கஹாலில் நீரை சேர்ப்பதை பற்றி ஆய்வுகள் செய்து முனைவர் பட்டம் பெற்றார். அவர் பணியாற்றிய பீட்டர்ஸ்பர்க் பல்கலையை உலகத்தர வேதியியல் அமைப்பாக தன் உழைப்பால் கட்டமைத்தார். மென்டலீவை ஒரு விஷயம் நெடுநாட்களாக மண்டையை போட்டு குழப்பிக்கொண்டு இருந்தது. வெவ்வேறு தனிமங்களை எப்படி வகைப்படுத்துவது என்பதே அந்த கேள்வி; அதற்கு முன் நியூலாண்ட் எனும் அறிஞர் அணு எடையை கொண்டு தனிமங்களை வகைப்படுத்தி இருந்தார்;

அதற்கு பிறகு லோதர் மேயர் என்பவர் இணைவுத்திறனை கொண்டு கண்டுபிடிக்கபட்ட 53 தனிமங்களில் 28--ஐ வகைப்படுத்தி இருந்தார். இதுவெல்லாம் அவ்வளவாக தகவல் தொடர்பில்லாத காலம் என்பதால் இவருக்கு தெரியாது; பாணினி எனும் சம்ஸ்க்ருத இலக்கண வல்லுனரின் நூல் மீது பெரிய, மரியாதை இருந்ததாம். சொற்களின் ஒலிப்பு எப்படி உச்சரிப்புக்கு ஏற்ப மாறுபடுகிறது என விதிகளின் மூலம் பாணினி கட்டமைத்தது போல ஒரு விதியின் மூலம் தனிமங்களை அட்டவணைப்படுத்த முடியும் என மென்டலீவ் நம்பினார்.

ஒரு நாள் தூங்கிக்கொண்டு இருந்த பொழுது ஒரு கனவு கண்டார். அதில் மேலே எண்ணிடப்பட்ட பந்துகள் ஒரு அட்டவணையில் வீழ்வது போல காட்சிகள் ஓடின. அப்படியே எழுந்து ஓடியவர் தனிமங்களை அவற்றின் அணு எடையை கொண்டு வகைப்படுத்தினார் -கச்சிதமாக வந்தது. சில இடங்களில் தனிமங்கள் இல்லாமல் இருப்பதை கண்டார். அவை இன்னும் கண்டுபிடிக்கபடாத தனிமங்கள் என சொல்லி அவற்றின் வேதி பண்புகளை துல்லியமாக கணித்தார். அவையே பின் ஜெர்மனியம், ஸ்காண்டியம், காலியம் ஆகிய தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது அவர் சொன்ன பண்புகள் அப்படியே பொருந்தின. அந்த தனிமங்களுக்கு அவர் பாணினிக்கு மரியாதை செலுத்தும் விதமாக சம்ஸ்க்ருத சொற்களை முன்பெயராக வைத்தார்.

இவர் நாட்டின் வோட்காவில் உள்ள நீரின் அளவை இவரே மாற்றியமைத்தார்; கூடவே அவர் நாட்டின் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். பெட்ரோல் உலகின் முக்கியமான எரிபொருள் ஆகும் என 19 ஆம் நூற்றாண்டிலேயே சொன்னவர் இவர், தனிம அட்டவணையின் தந்தையான இவரின் நினைவு நாள் இன்று (பிப்.2).