>>>வயநாடு (கேரளா )...!

 
கேரளாவில் வற்றாத அழகு கொட்டிக் கிடக்கும் மாவட்டம் வயநாடு. இந்த மாவட்டத்தின் முக்கால்வாசி இடம் வனப்பகுதி என்பதால் இங்கு எங்கு திரும்பினாலும் பச்சைப் பசேல்தான். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 700 முதல் 2,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வயநாடு, தமிழக மற்றும் கர்நாடக மாநில சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும் மைசூர் அருகே அமைந்துள்ளது இன்னொரு சிறப்பு. இயற்கை ஆட்சி செய்யும் வனப்பு மிக்க வயநாடுதான்

கேரளாவில் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு கடந்த 1980ம் ஆண்டு வயநாடு மாவட்டம் உருவாக்கப்பட்டது. கல்பெற்றா, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி, வைத்திரி ஆகிய இடங்கள் முக்கியமானவையாகும். இங்கு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் நிறைய உள்ளன.

பேகர் வனவிலங்கு சரணாலயம்:
மானந்தவாடி என்ற இடத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது பேகர் வனவிலங்கு சரணாலயம். இங்கு பலவகையான அரிய விலங்குகளைப் பார்க்கலாம். இதே போல மானந்தவாடியில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள நாகர்ஹோல் வனவிலங்கு சரணாலயப் பகுதியிலும் பல வகை விலங்குகளின் நடமாட்டத்தைக் காண முடியும். அரிய வகைத் தாவரங்களும் இங்கு உண்டு. இயற்கை விரும்பிகளுக்கு இவை மறக்க முடியாத இடங்களாகும்.

செம்ப்ரா உச்சி:
கல்பெற்றாவில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது செம்ப்ரா உச்சி என்ற செம்ப்ராமலை முகடு. கடல் மட்டத்தில் இருந்து 2100 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலை உச்சிதான் வயநாட்டின் உயரமான மலை உச்சி ஆகும். மலை ஏற்றத்துக்கு சிறந்த இடம்.


கரலாட் லேக்:

கரலாட் ஏரி கல்பெற்றாவில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. அழகிய சோலைகளால் அலங்கரிக்கப்பட்ட கரலாட் ஏரியில் படகுச் சவாரி நடத்தப்படுகிறது. இந்த ஏரியில் தூண்டில் போட்டு மீன்பிடித்தும் பொழுது போக்கலாம்.


சிப்பாரா அருவி:
வயநாட்டுக்கு அருவிகளும் அழகு சேர்த்துக் கொண்டிருக்கின்றன. மேப்பாடிக்கு அருகே உள்ள சிப்பாரா அருவி காண்போரை பரவசப்படுத்துவதோடு ஆச்சரியப்படுத்தவும் வைக்கிறது. 100 அடி முதல் 300 அடி உயரத்தில் இருந்து வரிசைத் தொடராக கொட்டிக் கொண்டிருக்கும் அருவிகள், கண்களைக் கொள்ளை கொள்ளும். அருவியின் தடாகத்தில் நீந்தி மகிழலாம். இதே போல மேப்பாடிக்கு அருகே வெள்ளரிமலா கிராமத்தில் அமைந்துள்ள சென்டினல் ராக் அருவியும் பிரபலமானது.


மீன்முட்டி அருவி:

சுமார் 300 மீட்டர் உயரத்தில் இருந்து கொட்டிக் கொண்டிருக்கும் மீன்முட்டி அருவி, ஊட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. அழகும், ஆர்ப்பரிப்பும் மீன்முட்டி அருவியின் தனிச்சிறப்பு. விண்முட்டி நிற்கும் மீன்முட்டி அருவியின் அழகு, நம்மை கண்கொட்ட விடாமல் மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கும்.




குருவா தீவு:
இயற்கை விரும்பிகளின் மிதக்கும் சொர்க்கபுரியாகத் திகழும் குருவா தீவு, கபினி ஆற்றையொட்டி சுமார் 950 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அழகான வனப்பகுதி. அரியவகை பறவைகள் இங்கு வாழ்ந்து வருகின்றன. ஆபூர்வ மூலிகைகளும் உள்ளன.
முத்தங்கா வனவிலங்கு சரணாலயம்:
சுல்தான் பத்தேரியில் இருந்து 15 கி.மீ தொலைவில் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் போன்றவை இங்கு உள்ளன. வனத்துறையினர் ஆற்றோரமாக யானைச் சவாரியையும் நடத்தி வருகின்றனர்.

இவை தவிர அம்புக்குத்தி மலையடிவாரத்தில் உள்ள முனியறா, வயநாடு ஹெரிடேஜ் மியூசியம், கொட்டமுண்டா கிளாஸ் டெம்பிள், கோரோம் மசூதி, திருநெல்லி கோவில், பழசிராஜா டாம்ப் உள்ளிட்ட பார்க்கத் தகுந்த பல இடங்கள் உள்ளன.
கேம்ப் பயர், மரவீடுகள்:
இது தவிர சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அடர்ந்த காட்டுக்குள் கேம்ப் பயர் நடத்தப்படுகிறது. காட்டுக்குள் கொட்டும் பனிக்கு இதமாக, நெருப்பு முன் அமர்ந்து குளிர் காய்ந்தவாறு அந்தப் பகுதியின் கதை சொல்லி ஒருவர் சொல்லும் சுவாரஸ்யமான கதையைக் கேட்டுக் கொண்டே, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்திற்குள் சென்று தூங்கி, காலையில் மேனியை இதமாகத் தொடும் காலை வெயிலுக்கு ஹாய் சொல்லி எழுவது வித்தியாசமான அனுபவம். காட்டுக்குள் காலாற நடந்து சென்று இயற்கையை ரசிக்கலாம். மரங்களின் மீது அமைக்கப்பட்டுள்ள மரவீடுகளில் தங்கி இயற்கையுடன் ஒன்றிப் போவதும் புதுமை அனுபவமே. இவை வயநாட்டின் ஸ்பெஷல்.
உணவு, தங்குமிடம், போக்குவரத்து:
வயநாட்டில் உணவைப் பொறுத்த வரை நாவிற்கு ருசியான நல்ல உணவு வகைகள் கிடைக்கின்றன. கல்பெற்றா, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி, வைத்திரி ஆகிய இடங்களில் தங்கும் விடுதிகள் உள்ளன. போக்குவரத்து வசதிகளை பொறுத்தவரை வயநாட்டுக்கு நல்ல ரோடு வசதிகள் உள்ளன. அருகில் உள்ள கோழிக்கோட்டில் ரயில் நிலையமும், விமான நிலையமும் உள்ளன.